மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல், அரசு மரியாதையுடன் அடக்கம்! -வீடியோ

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல், அரசு மரியாதையுடன் அடக்கம்! -வீடியோ

கொரோனா தொற்று காரணமாக கடந்த அக்டோபர் 13 முதல் சென்னையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கொரோனா தொற்றால் 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் கட்சிப்பணியைத் தொடங்கி, திறம்பட கட்சிப் பணியை ஆற்றி வந்த துரைக்கண்ணுவின் இறப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாகவும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அரவணைத்து கட்சியைப் பலப்படுத்தியவர் அவர் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 63 குண்டுகள் முழங்க அவரது தோப்பிலேயே உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட ராஜகிரியைச் சேர்ந்த துரைக்கண்ணு (72) இளங்கலைப் பட்டப்படிப்பு (பி.ஏ.) படித்தவர். தொடக்கத்தில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய இவர் 1972-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். கிளைக் கழகச் செயலர், மாணவரணி, இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் எம்ஜிஆர் காலத்திலேயே பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலரானார். இதேபோல, ஜெயலலிதா காலத்திலும் ஒன்றியச் செயலராகப் பதவி வகித்த இவர் சில ஆண்டுகளாக தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்தார். இதனிடையே, மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.

இவர் 2006 – 2011 ஆம் ஆண்டுகளிலும், 2011 – 2016 ஆம் ஆண்டுகளிலும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இதே தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் வேளாண் துறை அமைச்சரானார்.

இவருக்கு மனைவி பானுமதி, 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் சிவவீரபாண்டியன் வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அய்யப்பன் என்கிற சண்முகபிரபு தற்போது மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக உள்ளார்.

error: Content is protected !!