September 28, 2022

போதை ஏறி புத்தி மாறி – விமர்சனம்!

சர்வதேச அளவில் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3.9 முதல் 6.9 சதவீதம் பேர் வரை போதைப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். வருடம் தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிரை போதைப் பழக்கம் பறிக்கிறது. போதை பழக்கத்தால் உலகம் முழுவதும் குற்றங் கள், விபத்துகள், கலாசார சீரழிவுகள் அதிகரித்துவிட்டன. இது ஒரு நாட்டின் வளர்ச்சி யையும் கவுரவத்தையும் பாதிக்கும் அளவுக்கு கொடிய வடிவம் எடுத்துள்ளது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது. இதில் புகையிலை, மது, கஞ்சா ஆகியவை இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப் படுகின்றன. இதே போல, கஞ்சா, ஆம்பிட்டமின் போன்றவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும், ஹெராயின், எல்.எஸ்.டி. போன்றவை வடஅமெரிக்காவிலும், ஓப்பியம் கலந்த போதைப் பொருட்கள் மற்றும் பிரவுன் சுகர் மத்திய கிழக்கு ஆசியாவிலும், பென்டானில், எல்.எஸ்.டி., பிரவுன் சுகர், ஹெராயின் போன்றவை வளர்ந்த நாடுகளிலும் அதிகமாக பயன்படுத்தப் படுகின்றன. இதையெல்லாம் தடுக்கவும், இவைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து ஏகப்பட்ட யூ ட்யூப் குறும்படங்கள் , சினிமாக்கள் வந்துள்ளன. மேலும் ஏ ஏ எனப்ப்டும் ஆல்கஹால் அனானிமஸ் என்ற குழு உலகம் முழுக்க கூடி தங்களுக்கு ஏன் போதை பழக்கம் ஏற்பட்டது என்றும் அதனால் தான் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதையும் பகிர்வது இன்றளவும் நடக்கிறது. அந்த வகையில் போதைப் பொருளால் நேரும் வீபரீதத்தை ஒரு புது டீம் தன் பாணியில் சொல்ல முயன்றிருப்பதுதான் ‘போதை ஏறி புத்தி மாறி’ படம்.

நாயகன் தீரஜ்.-ஜூக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் யங்க்ஸ்டர் வழக்கப்படி முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பனின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது நாயகன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெறுப்பேற்றும் நோக்கில் கையில் கிடைத்த போதை பவுடரை வாங்கி செல்ஃபி டுக்க முயல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக போதை பவுடர் நாயகன் உடலில் ஏறி விடுகிறது. இதனிடையே , போதை மருந்து கடத்தல் தொடர்பாக லேடி ஜர்னலிஸ்ட் ஒருவர் செய்திகளை சேகரித்து வருகிறார். இதனை கண்டு கொண்ட போதை கடத்தல் கும்பல் டாப் போலீஸ் ஆபீசர் உதவியுடன் அச்செய்தியையும், செய்தியை சேகரித்தவர்களையும் அழிக்க முயல்கிறார்கள். அச்சமயம் மேற்படி கும்பலிடம் நாயகன் & கோ மாட்டி விடுகிறது. ஆக தவறுதலாக எடுத்த போதை கூட ஒருவரது வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது? என்பதை நாயகன் ஏஏ குரூப் பாணியில் சொல்வதே இப்படக் கதை.

ஹீரோ தீரஜ் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். சென்னை நகரில் பிரபலமான போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் . நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தை தோளில் தூக்கி சுமக்க நினைத்திருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் டீ கூட குடிக்காத அவரின் நடிப்பின் மீது பிரமாதமான அபிப்ராயம் கொஞ்சமும் வரவில்லை. ஆனாலும் முதல் படத்தை முழுவதுமாக தாங்குவதில் ஜெயித்து விட்டார்.நடிகை துஷாரா-வுக்கு போதிய வாய்ப்பில்லை. மேலும் நண்பர்கள் வட்டாரத்தில் அடிக்கும் லூட்டியும், ஆக்‌ஷன்களும், நடிப்பும் சின்ன பிள்ளை தனமாக இருக்கிறது.

பிதாமகன், உதயநிதி ஸ்டாலினின் படங்கள், சிவகார்த்திகேயனின் சீமைராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கேமராவைப் பேசவைத்த பாலசுப்பிரமணியம் கை வண்ணத்தில் ஒற்றை வீட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் கண்களை காயப்படுத்தவில்லை. மியூசிக் டைரக்டர் கேபி பின்னணி இசைக்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்.

ஆனால் எடுத்துக் கொண்ட விஷயத்தை திரைக்கதை பின்னல் என்று நினைத்துக் கொண்டு ரொம்ப சலிப்படையை வைத்து விட்டார்கள். மத்திய அரசின் முப்பது விநாடி விளம்பரத்தில் கூட நச் என்று நெற்றி பொட்டில் அறைந்தார் போல் மெசெஜ் சொல்லும் இக்காலத்தில் இப்போதைக் கரங்களின் கொடூரத்தை அம்புலிமாமா பாணியில் சொல்லி வெறுப்பேற்றி விட்டார் இயக்குநர்.

மொத்தத்தில் போதை ஏறி பாதை மாறி – ஊஹூம் போதலை!

மார்க் 2.5/5