March 25, 2023

உதயம் காம்ப்ளக்சில் தொடரும் பிளாக் டிக்கெட் விற்பனை! – வீடியோ

ஒருகாலத்தில் நடுத்தரவர்க்கத்தின் சொர்க்கமாக இருந்தது. டிக்கெட் கட்டணம் தொண்ணூறுக்கும் குறைவு. நீண்ட பார்க்கிங் ஏரியாவில் வண்டி நிற்கிறதோ இல்லையோ, அரைடஜன் பிளாக் டிக்கெட் பார்ட்டிகள் எப்போதும் இருப்பார்கள். காக்கி காவலர்கள் பொறுப்பாக வந்து அவர்களிடம் அன்பளிப்பு பெற்றுச் செல்வது கண்கொள்ளாக்காட்சி. முன்னராவது அவ்வப்போது அவர்கள் தெரிவு செய்து தரும் நபர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்லும் கண்துடைப்பும் ரசிக்கத்தக்கது. இப்போது அதுவும் கிடையாது. பல நேரங்களில் யூனிஃபார்ம் அணிந்த ஊழியர்களே கையில் டிக்கெட்டுடன் பிளாக் டிக்கெட் தொழிலில் இறங்குவது சகஜமாகி விட்டது. தட்டிக் கேட்டால் பிளாக் டிக்கெட் பார்ட்டிகளிடம் புகார் செல்லும். அடுத்து என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லையே.!

உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு திரையரங்குகள். சரியான பராமாரிப்பில்லை. குடிநீர் இருக்கும் தண்ணீர் கேனை திறந்தால் அவ்வளவுதான். வண்டல் படிந்த நீர்தான் எப்போதுமிருக்கும். மினி உதயம் திரையரங்கின் வடிவமைப்பை உள்வாங்கிக் கொள்ள நாலு படங்களாவது அங்கு பார்த்தாக வேண்டும். மற்ற திரையரங்குகளைப் போலவே வெளியே பத்து ரூபாய்க்கு விற்கும் பப்ஸை கூசாமல் இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். அரை லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்.

மது அருந்தினால் உள்ளே அனுமதியில்லை. ஆனால் கால்வாசி பேர் பக்கத்து டாஸ்மாக்குக்கு போய்விட்டே வருகிறார்கள். ஸ்டெடியாக வந்தால் அனுமதி உண்டு. ஆடிக்கொண்டே வந்தால் கெட்அவுட்தான். – இந்த ரிப்போர்ட் 2013-ல் வந்தது என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மேற்படி பிளாக் அடாவடி மற்றும் ஏனைய பிரச்னைகள் இன்றளவும் தொடர்கிறது என்பதுதான் சோகம்.

இந்த தியேட்டரில் அண்மையில் உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை என்ற தலைப்பில் ரிப்போர்ட்டுகளும், வீடியோக்களும் வெளி வந்த நிலையிலும் இந்த உதயம் தியேட்டரின் போக்கும் மாறவில்லை.. தயாரிப்பாளர் சங்கமும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று உதயம் தியேட்டரில் எடுக்கப்பட்ட வீடியோ இதோ:

https://www.youtube.com/watch?v=Tcc5Mh1JnRY&feature=youtu.be