October 20, 2021

உ.பி.யில் காதலர்களை கண்காணிக்கும் ஆன்டி-ரோமியோ ஸ்குவாட்!

சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, உ.பி.,யில் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இந் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வணிக வளாகங்கள், பூங்காக்கள், திரையரங்க வளாகங்கள் போன்ற பொது இடங்களில் சுற்றும் காதல் ஜோடிகளை பிடிக்கும் நடவடிக்கையில் உத்தரப்பிரதேச போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
up mar 23
முன்னதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, , பெண்களின் பாதுகாப்புக்காக, அவர்களை பின்தொடர்வது, கிண்டல் செய்வது உள்ளிட்ட வற்றில் ஈடுபடும் ‘ரோமியோ’க்கள் மீது நடவடிக்கைஎடுக்க, உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார். கல்லுாரி, பள்ளிகள் அருகிலும், முக்கிய இடங்களிலும் பெண்களை கிண்டல் செய்வது, சீண்டுவது போன்றவற்றில் ஈடுபடுவோரை பிடித்து, அவர்களுக்கு உடனடியாக அங்கேயே தண்டனை அளிக்கும் நடவடிக்கையை, போலீசார் துவக்கி உள்ளனர்.
இதற்கெனவே காவல்துறையில் ஆன்டி-ரோமியோ ஸ்குவாட் என்ற பெயரில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. லக்னோ, மீரட், ஜான்சி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், காதலிகளுடன் சுற்றிய இளைஞர்களை கைது செய்தனர். பூங்கா உள்ளிட்ட இடங்களில் காதலிகளுடன் வந்த இளைஞர்களை, அந்த இடத்திலேயே தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பினர். இது இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்பேரில், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொது இடங்களை பாதுகாப்பான பகுதிகளாக மாற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள போலீஸ் அதிகாரிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே, காதலிகளுடன் வெளியில் சுற்றும் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்து மதப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலிப்பதை தடுக்கவே இதுபோன்ற உத்தரவை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.