September 20, 2021

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது பாஜக!

திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அங்குள்ள லெனின் சிலையை அகற்றியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் சுமார் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி பாஜக, ஐபிஎப்டி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. போட்டியிட்ட 51 தொகுதிகளில் 35 இடங்களை பாஜக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

மகளிர் தினமான மார்ச்.8ம் தேதி புதிய ஆட்சி பதவியேற்க உள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான 48 மணி நேரத்திற்குள் தெற்கு திரிபுராவில் உள்ள பொலெனியா கல்லூரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த லெனின் முழு உருவச் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தரப்பினரிடையே கடும் மோதல் வெடித்துள்ளது. லெனின் சிலை அகற்றத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.திரிபுரா அரசியலில் பாஜக வெற்றியை தொடர்ந்து இயல்பு நிலை வழக்கத்துக்கு மாறாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவின் இத்தகைய செயல் அம்மாநில மக்களுக்கும் பிடிக்கவில்லை எனவும்கூறப்படுகிறது.

 

இதனிடையே இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில் இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என பதிவிட்டுள்ளார்.