ரூ.1-க்கு மதியஉணவு வழங்கும் ஜன ரசோய் திட்டம் – கவுதம் கம்பீர் தொடங்கினார்!

ரூ.1-க்கு மதியஉணவு வழங்கும் ஜன ரசோய் திட்டம் – கவுதம் கம்பீர் தொடங்கினார்!

பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது கிழக்கு டெல்லி தொகுதியில் ரூ.1-க்கு மதியஉணவு வழங்கும் ஜன ரசோய் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்து, கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆகவும் வெற்றி பெற்றார். தற்போது, முழு நேர அரசியல்வாதியாகி விட்ட கவுதம் கம்பீர், பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக தனது தொகுதி மக்களுக்கு 1 ரூபாயில் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக காந்தி நகர் பகுதியில் உள்ள வணிக வளாகம் சமையல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் இந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 100 பேர் வரை அமர்ந்து உணவு அருந்த முடியும். தற்போது, கொரோனா காலகட்டம் என்பதால் 50 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லி அசோக் நகரிலும் இதே போன்று கேண்டீனை திறக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் கம்பீர். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெருவோரத்தில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 வேளை கூட உணவு சாப்பிட முடியாத நிலையில்’ உள்ளனர். தலைநகர் டெல்லியில் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்க கேண்டீன்கள் இல்லை. ஒவ்வொரு மக்களும் சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஆரோக்கியமான உணவினை பெற வேண்டும். தனது கிழக்கு டெல்லியில் இதுபோன்று 10 கேண்டீன்களை திறக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் கம்பீர்.

தற்போது மதிய உணவாக அரிசி சாதம், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த மதிய உணவிற்கு கட்டணம் 1 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் முழுமுழுக்க கவுதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. அரசிடம் இருந்து எந்த உதவியும் இத்திட்டத்திற்காக பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!