திரிபுரா அரசு உழைப்பாளர் தினத்தை விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியது!
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படும் நிலையில் இந்த உழைப்பாளர் தினத்தை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில அரசுக்கு அம்மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதிலும் இந்தியாவில் உழைப்பாளர் தினம் அரசு விடுமுறையாக உள்ளது. ஆனால் 2019-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்ட திரிபுரா மாநில அரசு, உழைப்பாளர் தினத்தை பட்டியலில் இருந்து நீக்கியது. பதிலாக அந்த நாளை வரையறுக்கப்பட்ட விடுமுறையாக குறிப்பிடப்பட்டது.
மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சங்கர் பிரசாத் தத்தா, “மே தினம் என்பது எந்த அரசியலையும் சாராதது. உலகம் முழுவதும் அன்றைய நாள் உழைப்பாளர் தினமாக கொண்டாடப் படுகிறது. மாநில அரசின் இந்தச் செயல் உழைக்கும் மக்களை அவமதிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பில் புகார் செய்யப் படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.