இந்தியாவில் தரமற்ற உணவுகளா? கூகுள் & பேஸ்புக் நிறுவனங்களிடம் மத்திய அரசு புகார்!

இந்தியாவில் தரமற்ற உணவுகளா? கூகுள் & பேஸ்புக் நிறுவனங்களிடம் மத்திய அரசு புகார்!

இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பாலில் கலப்படம் போன்று பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருப்பதை அடுத்து இது போன்ற தவறான தகவல்கள் பரப்பும் கணக்குகள் மற்றும் பக்கங்களை முடக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக மக்கள் தொகையில் சுமார் 380 கோடி மக்கள் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 250 கோடி பேர் சமூக வலைதளங்களின் தொடர்பில் இருக்கின்றனர். அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 35 சதவீதம் மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதிலும் குறிப்பாக சுமார் 220 கோடி பேர் தங்களது மொபைல் மூலம் சமூக வலை தளங்களோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறார்கள். இதனால்தான் சமூக வலைதளங்கள் மிகப் பெரிய விர்ச்சுவல் சந்தையாக இருக்கிறது. உலக அளவில் தினசரி 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற் பனையாகிறது. சமூக வலைதளங்களில் 1 நொடிக்கு 21 புதியவர்கள் நுழைகின்றனர். ஃபேஸ்புக் வலைதளத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 9 லட்சம் புதிய பயனாளிகள் பதிவு செய்கிறார்கள் என்கிறது ஆய்வு. ஒரு நொடிக்கு 15 புதிய பயனாளிகள் பதிவு செய்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. வாட்ஸ் அப் செயலியின் வளர்ச்சியோ ஆண்டுக்கு 70 சதவீதமாக இருக்கிறது என்பதும் முக்கியமானது.

இப்படி பல தரப்பினரையும் தொடர்பு கொள்ளும் வெளியாக சமூக வலைதளப் பக்கங்களில் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்; யாரைப் பற்றி வெண்டுமானாலும் எழுதலாம். எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எல்லையில்லா சுதந்திரம் தனி மனிதனுக்குக் கிடைத்த பின், ஒவ்வொரு மனிதனும் சமூக வலைதளங்களில் தங்கள் நோக்கத்துக்கும் பதிவிடத் துவங்கி விட்டார்கள். இதனால், எந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தனி மனித சுதந்திரம் பாதிக்கப் பட்டிருப்பதாக ஒரு பக்கம் குரல் எழும்பிக் கொண்டிருக்க, இந்த பிரச்னையை எப்படி கட்டுப் படுத்துவது என புரியாமல், மத்திய அரசே தடுமாறிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளப் பதிவுகளால், தனி மனித பாதிப்புகளைக் கடந்து, ஒரு சமூகமே பாதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்திய உணவு பொருட்கள் மற்றும் உணவு முறைகள் குறித்து, தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் பதிவிடப்பட்டு, பரப்பப் படுகிறது. இதனால், மத்திய அரசு மிகவும் கவலையடைந்திருக்கிறது. அதன் மீது நடவடிக்கையும் எடுக்கத் துவங்கி இருக்கிறது. அதாவது இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்களும் பரப்பப்பட்டு வருவதை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கி இருக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை, சமூக வலைதளங்களில் இந்திய உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான தகவல்களை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்பு கூகுள் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் தொழில் நுட்பத் துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப் பாட்டு ஆணையகத்தைச் சேர்ந்தவர்கள், “இந்திய உணவுகள் குறித்து தவறான தகவல்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுவதால், உலக அரங்கில் இந்தியான் நன்மதிப்பு முழுவதுமாக குறைந்து விடும். இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவை சாப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என தொடர்ந்து, சமூக வலைதளங்கள் மூலம் செய்தி பரப்பினால், இந்தியாவுக்கு வரும் அன்னிய நாட்டு சுற்றுலாப் பயணிகள், முதலில் இந்தியாவுக்கு வருவதையே தவிர்க்கக் கூடும். அப்படியே இந்தியாவுக்கு வந்தாலும், அவர்கள், இந்திய உணவுப் பொருட்களை தவிர்ப்பர். இதனால், இந்தியாவின் அன்னிய செலாவணி குறையும். இதனால், உணவு சார்ந்த தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், தவறான தகவல் பரப்பும் கூகுள், பேஸ்புக் கணக்குகளை முடக்க வேண்டும் என, அந்நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளோம்”என்று தெரிவித்தனர்

error: Content is protected !!