October 17, 2021

உலகின் முதல் நாடாக எல் சால்வடாரில் பிட்காயின் அதிகாரப்பூர்வ பணமாக அறிவிப்பு!

ரு நாட்டின் அரசால் வழங்கப்படும் டாலர், ரூபாய், யென் போன்ற கரன்ஸிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது பிட்காயினை இணையதள பணமாக சர்வதேச அளவில் முதல் நாடாக எல் சால்வடாரில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதனால் பிட்காயினின் சந்தை மதிப்பு எகிறியது.

அண்மை காலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உலகில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழில் மெய்நிகர் பணம் என்றழைக்கப்படுகிறது. பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதைத்தான் இப்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேசச் சந்தைதான் நிர்ணயிக்கிறது. இந்த கிரிப்டோ கரன்சி ஏதாவது சூதில் போய் முடியுமோ, இதைப் பயன்படுத்துவதை அங்கீகரித்தால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடுமோ என்று நமதுரிசர்வ் வங்கி அஞ்சியதுடன் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கவும், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கும் கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்படுமோ என்றும் கவலைப்பட்டு அதை நம் நாட்டில பயன் படுத்த தடை விதித்திருந்தது. ஆனா ரிசர்வ் வங்கி விதிச்ச பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கான தடையை சுப்ரீம் கோர்ட் பின்னர் நீக்கி விட்டது குறித்த செய்தி நம் ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மில் முன்னரே வந்தது நினைவிருக்கும்.

இந்நிலையில் உலகின் முதல் நாடாக எல் சால்வடாரில் இணையதள பணமான பிட்காயினை அதிகாரப்பூர்வ பணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் மற்ற நாணயங்களை போல் கிரிப்டோகரன்சியான பிட்காயினையும் மக்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிபர் நயீப் புக்ளே தாக்கல் செய்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், 90 நாட்களில் அமலுக்கு வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக்குவதன் மூலம் எல் சல்வேடாரில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், மற்ற நாடுகளுடன் வர்த்தக ரீதியான அனுகுமுறையை எளிதாக்க முடியும் என அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பிட்காயின் சந்தை மதிப்பு 6 சதவீதம் உயர்ந்து 35 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்களில் நிலைபெற்று, ஒட்டுமொத்த மதிப்பு 640 புள்ளி 17 பில்லியன் டாலராக உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..