December 4, 2022

சங்கடங்களைக் கடந்து சாதனைப் படைத்த உமா பிரேமனின் வாழ்க்கை படமாகிறது.

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அதாவது ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக் கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகள் என பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் உமாவின் எட்டாவது வயதில் அவரின் தாய் ஒருவருடன் சென்றுவிட, வீட்டையும் அப்பாவையும் கவனிக்கும் பொறுப்பு உமாவின் மீது விழுந்தது. உறவினர்களின் கட்டாயத்தால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் உமாவின் அப்பா. உமாவை ஆற்றில் தள்ளிவிட்டுக் கொலை செய்யும் முயற்சி வரை தொடர்ந்தன.  சித்தியின் கொடுமைகள்.சில ஆண்டுகளுக்குப் பின் உமாவின் முன் வந்து நின்றார் அம்மா. மகளைச் சட்டரீதியாகத் தன்னுடன் அழைத்துச் சென்றவர், தன் காதலன் ஒருவனிடம் 25,000 ரூபாய்க்கு விற்றுவிட்டார். அந்த நபர் உமாவை மும்பைக்குப் பாலியல் தொழில் செய்ய அழைத்துச் செல்ல, அங்கிருந்து அவர் தப்ப ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது இன்னொரு சிறை என்பதைக் காலம் உணர்த்தியது. உமாவைப் பாலியல் தொழிலுக்காக அழைத்துச் சென்ற நபருக்கு 50,000 ரூபாய் கொடுத்து உமாவை மீட்டார் பிரேமன். அதனாலேயே தன்னைவிட 24 வயது மூத்த பிரேமனுக்கு நான்காவது மனைவியானார் உமா.

அந்த கால வாழ்க்கைக் குறித்து பேசிய உமா“என்னை 50,000 ரூபாய்க்கு வாங்கிய பிரேமன், என் கன்னித்தன்மையைச் சோதிக்க மருத்துவரிடம் அவர் என்னை அழைத்துச் சென்ற நாளில், இனி இந்த உலகில் நான் அனுபவிக்கவேண்டிய துயர் ஒன்றும் இல்லை எனத் தோன்றியது. நான் உயிர் உள்ள மனுஷி, எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்று அவர் ஒருபோதும் நினைத்த தில்லை. அவர் விருப்பத்துக்கு நான் வாழ வேண்டும்; வாழ்ந்தேன். ‘இவர் இறந்துபோய்விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்றும், ‘ஏதாவதொரு விபத்தில் நான் இறந்துபோய்விட்டால் நிம்மதி’ என்றும் தோன்றும் அளவுக்கு, நரகமான வாழ்க்கை அது’’ என்பவர், இன்றும் அவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருப்பது ஏன்? ஒரு சிறுகதைபோல, அவர்கள் வாழ்க்கையின் ஓர் அத்தியாயத்தைப் பகிர்ந்தார் உமா.

“காசநோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றேன். 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 25-ம் தேதி, ரயில் பயணம் அது. முதலும் கடைசியுமாக நாங்கள் அதிக நேரம் பேசியது அந்தப் பயணத்தில்தான். ‘இந்த ஆபரேஷனில் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இறந்த பிறகு வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்வாயா? உன்னை இன்னொருவனின் மனைவியாக என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை’ என்றார். அதிகாரத்தை மட்டுமே வெளிப்படுத்தி யவரின் வார்த்தைகளில் அன்றுதான் முதன்முதலாக அன்பு தென்பட்டது. ‘இந்தப் பிரியத்தை ஏழு ஆண்டுகளில் ஒருமுறையாவது என்னிடம் காட்டியிருக்கக் கூடாதா?’ என்று கேட்டேன். ‘நீ என்னிடம் பயத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டதால், எனக்கு வேண்டியது எல்லாமே கிடைத்தது. பிறகு ஏன் நான் என் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்’ என்றார்.

அப்போதுதான், மருத்துவ சேவைக்காக ஒரு மெடிக்கல் இன்ஃபர்மேஷன் சென்டர் தொடங்க வேண்டும் என்ற என் ஆசையைச் சொன்னேன். அந்தப் பயணத்தில்தான் முதன்முறையாக என் கையைப் பிரியத்தோடு பற்றினார். வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பாதுகாப்பை உணர்ந்தேன். மறுநாள் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால் அவர் உயிரோடு வீடு திரும்பவில்லை. பிரேமனின் மனைவியாக என்னை உணர ஆரம்பித்து 24 மணி நேரம் ஆவதற்குள், அவர் எனக்கில்லாமல் போய்விட்டார். ஆனாலும், அந்த ஒரு நாள் அவரை நேசித்த அளவுக்கு, இன்றுவரை என்னால் யாரையும் நேசிக்கமுடியவில்லை. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 49. இப்போது எனக்கு வயது 49. நேற்றுகூட அவருடைய போட்டோவைப் பார்த்து, ‘இப்போது நம் இருவருக்கும் ஒரே வயது. வாடா, போடா என்றுகூடக் கூப்பிடலாம்’ என்று பேசிக்கொண்டிருந்தேன்’’ என்று சிரிக்கிறார் உமா.

காலங்கள் உருண்டோட, இன்று ஆலமர விருட்சமாக நின்று பலருக்கும் நிழல் தருகிறார். பின்னாளில்‘இந்தியாவின் தலைசிறந்த 100 பெண்களில் ஒருவராக’த் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நிலாச்சேறு எனும் இவரின் பயோபிக் புத்தகம் வெளியானது. இதுவரை, உமா பிரேமனின் மருத்துவச் சேவை மூலம சுமார் 680 நோயாளிகளுக்கு கிட்னி மாற்று அறுவைசிகிச்சை, 20,500-க்கும் மேற்பட்ட இதய அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.தன் வாழ்வில் முன் பாதி மிக வருத்தத்துக்குரியதாக இருந்தாலும், பின் பாதியை சமூகத்துக்காக அர்ப்பணித்து, அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டவரிவர்

இப்படி பல அசாதாரண வாழ்க்கைக்கு கட்டுப்படும் சாதனைப் படைத்த வாழ்க்கையே தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பயோபிக் திரைப்படமாகிறது. இப்படத்தை டிராபிஃக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார். இதை பற்றி அவர் கூறும் போது , ‘சகமனிதனை நேசிப்பதை விட ஆகசிறந்த தத்துவமோ, செயலோ எதுவுமில்லை என எண்ணுகிறேன். சுற்றியுள்ளவர்கள் தன்னை வேதனைக்குள்ளாக்கினாலும் அவர்களுக்கு அதீத அன்பையே பரிசளித்திருக்கிறார் உமா பிரேமன் அவர்கள். இப்படம் பல பேருக்கு உத்வேகமளிக்கும் என நம்புகிறேன்’. என்றார்.