பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை!
தமிழ்நாடு முழுக்க 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மறுமுறை விதி களை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் படி இனி பிளாஸ்டிக்கை உபயோகிப்போருக்கு குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமான ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
அதாவது சிறிய வணிக விற்பனையாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்ற வகைக்கு முதல் தடவைக்கு 100 ரூபாயும், இரண்டாம் முறைக்கு 200 ரூபாயும், மூன்றாம் முறைக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
மளிகைக்கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன் படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 1000 ரூபாயும், இரண்டாம் தடவை 2000 ரூபாயும், மூன்றாம் தடவை 5000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.
வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தடவை 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தடவை 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கிவீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தடவை 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தடவை ரூ.1 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.