பீகார் கள்ளச் சாராய சாவுகள் – முதல்வர் நிதிஷ் குமாரின் அலட்சியம் சரியல்ல!

பீகார் கள்ளச் சாராய சாவுகள் – முதல்வர் நிதிஷ் குமாரின் அலட்சியம் சரியல்ல!

பீகாரில் இன்னொரு கள்ள சாராய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சரண் எனும் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து சாவுகள் நடந்திருக்கின்றன. அரசுத் தரப்பில் 30 பேர் என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட கிராமத்து மக்கள் 56 பேர் என்று கணக்கு சொல்கிறார்கள். பலருக்கு கண்ணும் போயிருக்கிறது. இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் துவங்கி இருக்கிறது. நியாயமான கோரிக்கை. ஆனால் எந்த நஷ்ட ஈடும் கொடுக்கப்பட மாட்டாது என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்திருக்கிறார். ‘கள்ள சாராயம் குடித்தால் செத்துப் போவோம் என்று தெரிந்துதானே குடிக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். நஷ்ட ஈடு கொடுத்தால் குடிப்பவர்களை ஊக்குவிப்பது போல ஆகும் என்கிறார். உங்க லாஜிக்கில தீய வைக்க!

மதுவிலக்கு என்பது கொஞ்சமும் உருப்படாத சிந்தனாவாதம் என்று நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். அதுவுமின்றி எதையுமே தடை செய்வது என்பது அரசு தனது பொறுப்பில் இருந்து கழண்டு கொள்வது போலத்தான். நல்ல சாராயம் சாப்பிட்டு செத்தால் அது அரசாங்கத்தின் பொறுப்பாகி விடும். அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். கள்ள சாராயம் குடித்து செத்தால் இப்படித்தான் பொறுப்பின்றி பதில் சொல்லி விட்டுக் கடந்து விடலாம்.

ஆன்லைன் ரம்மி தடை சம்பந்தமான கா*ணொ*லியிலும் இதையேதான் குறிப்பிட்டு இருந்தேன்.[1] ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் திருட்டு ரம்மி இணைய தளங்கள் உருவாகி விடும். அவற்றில் விளையாடி பணத்தை இழந்து தூக்கு மாட்டிக் கொண்டால் அது அரசின் பொறுப்பாக ஆகாது. சொல்லப் போனால் அது ரம்மிக் கணக்கிலேயே கூட வராது. ரம்மிதான் தடை செய்யப்பட்டு விட்டதே? மரத்தடியில் சீட்டாடி தூக்கு மாட்டிக் கொண்டால் அது பற்றி யாராவது கவலைப்படுகிறோமா? குடும்பப் பிரச்சினையில் தற்கொலை என்று ஆகி விடும்.

பீகாரிலும் இதே போல ஆங்காங்கே கள்ளச் சாராய சாவுகள் நடந்து வருகின்றன. இந்த முறை தலைக் கணக்கு கொஞ்சம் அதிகம் என்பதால் செய்தியாகி இருக்கிறது. ரெண்டு மூணு பேர் என்றால் ‘குடிகார நாய்ங்க செத்து ஒழியட்டும்,’ என்று கிராம மக்களே எரித்து முடித்து விடுவார்கள்.
மாறாக, இப்படிப்பட்ட விஷயங்களை அதிகாரபூர்வமாக ஆக்கினால் அவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். மது அடிமைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்த வேண்டும். நூற்றுக்கணக்கான போதை விடுதலை மையங்கள் துவங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களில் போதை விடுதலை கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

அது போலவே ரம்மி போன்றவற்றுக்கும் அவர்களின் அல்காரிதம்களை கண்காணிப்பது, விளையாட்டு செயலிகளில் செலவிடும் பணத்துக்கு வார வரம்புகள் விதிப்பது, Deaddiction centreகளை அமைப்பது என்று இயங்க வேண்டும். இதே போலவே பாலியல் தொழிலையும், போர்னோகிராஃபியையும் அணுக வேண்டும். இரண்டுமே சட்டபூர்வமாக ஆக்கப்பட்டு முறைப்படுத்த வேண்டும். அவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு abuse, exploitation போன்றவற்றை களைய சிறப்பு காவல்துறை குழு அமைக்க வேண்டி இருக்கும். அதில் ஈடுபடும் பெண்களின் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் பேணப்பட முனைப்புகள் துவக்க வேண்டி இருக்கும். (இதனை நான் வெகு நாட்களாக சொல்லிக் கொண்டு வருகிறேன்.] மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் இது குறித்து ஒரு கட்டுரை ஹிண்டுவுக்கு எழுதி இருக்கிறார்.

ஆனால் இந்திய அரசுகள் எப்போதுமே இந்த ‘தடைக் கலாச்சாரத்தை’ ஆதரித்து இயங்கி வந்திருக்கின்றன. அது ரொம்ப சுலபமான முடிவு என்பது தாண்டி, அதைத்தான் பொதுமக்களும் விரும்புகிறார்கள் என்பது முக்கிய காரணம். ஒரு சினிமா ஒரு புத்தகம் பிரச்சினையாக இருக்கிறதா? அதைத் தடை செய்து விடு. மதுவினால் தொல்லைகள் வருகின்றனவா? மதுவிலக்கு கொண்டு வா! ரம்மியினால் தற்கொலைகள் நிகழ்கின்றனவா? ஆன்லைன் ரம்மி செயலிகளை தடை செய். பாலியல் தொழிலா? அய்யய்யே! சீ சீ. அந்த சனியங்களை தடை செய்து போடு! ‘குடிக்கிற நாய் சாவட்டும்!’ எனும் நிதிஷ் குமாரின் அலட்சியத்துக்குப் பின்னால் நம்மைப் போன்ற பொதுமக்களின் அறிவீனம் பொதிந்திருக்கிறது.
-\
ஸ்ரீதர் சுப்ரமணியம்
.
.(டிஸ்களைமர்: தற்கொலை எண்ணம் பெரும்பாலும் மனம் சார்ந்த குறைபாடுகளால் வருவதுதான். யாருக்கேனும் தற்கொலை எண்ணம் இருக்கும் பட்சத்தில் அரசு சுகாதார உதவி எண் 104 அல்லது ஸ்னேகா எனும் தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனத்துக்கு 044-24640050 எனும் எண்ணுக்கு ஃபோன் செய்யவும்.)

Related Posts

error: Content is protected !!