April 17, 2021

தேசிய கீதம் தெரியாமல் திணறிய பீகார் கல்வி அமைச்சர் ராஜினாமா!- வீடியோ

பீகார் அமைச்சரவையில், கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்ரியை நியமிக்கப்பட்டார். இவ மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அவர் அமைச்சராக நியமிக்கப் பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளியிட்டது. இதில் தேசிய கீதம் பாடத் தொடங்கும் அமைச்சர் அடுத்தடுத்த வரிகள் தெரியாததால், வார்த்தைகளை மென்று விழுங்கி தடாலடியாக கடைசி வரியை இணைத்து தேசிய கீதத்தை முடித்த வீடியோ வைரலான நிலையில் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பீகார் கல்வியமைச்சர் மேவாலால் சவுத்ரி.

நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து, 7வது முறையாக பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். 3 நாட்களுக்கு முன்னதாக அவரும் அவருடைய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

இதனிடையே நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இது தொடர்பாக இரு கட்சியினரிடையேயும் காரசார விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் பீகாரின் கல்வியமைச்சராக இருந்த மேவாலால் சவுத்ரி தாமாக முன்வந்து முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். பதவியேற்ற மூன்றே நாட்களில் அவர் ராஜினாமா செய்திருப்பது பீகார் அரசியல் அரங்கில் பரபரப்பாக மாறியுள்ளது.