April 13, 2021

ஹைதராபாத் அணி வீரர் புவனேஷ்வர் குமார் போட்டியில் இருந்து விலகல்!

ஐபிஎல் டி.20 தொடரின் கதாநாயகர்களில் ஒருவரான ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கு வழக்கம் போல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த தொடர்களில் கடுமையாக சொதப்பிய டெல்லி, பெங்களூர் போன்ற அணிகளே இந்த தொடரில் மாஸ் காட்டி வரும் நிலையில், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து, தோல்வியால் துவண்டு போயுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக புவனேஷ்வர் குமாரால் இந்த தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின் பேரில் புவனேஷ்வர் குமார் நடப்பு ஐபிஎல் தொடரில் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து தற்போது புவனேஷ்வர் குமாரும் விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுக்கும் என தெரிகிறது