சுப்ரீம் கோர்ட்டின் நால்வர் குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் விலகல்!

சுப்ரீம் கோர்ட்டின் நால்வர் குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் விலகல்!

மோடி அரசின் 3 விவசாய சட்டங்களைத் தற்காலிகமாகத் தடை செய்ததுடன் விவசாயிகள் பிரச்சனை குறித்து விளக்கம் பெறுவதற்காக நான்கு உறுப்பினர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது .அந்த கமிட்டியில் இடம்பெறும் நான்கு நிபுணர்களின் பெயர்களையும் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. அந்த நால்வரில் ஒருவர் ஒருவராக பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் இடம் பெறுவார் என்றும் நேற்று அறிவித்த நிலை யில்.இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்து உள்ள கமிட்டியில் இருந்து தான் விலகிக் கொள்ள விரும்புவதாக பூபிந்தர் சிங் மான் கூறினார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், இந்தச் சட்டங்களுக்கு எதிரான வழக்கு 12/01/2021 சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது. நான்கு பேர் கொண்ட அந்த குழுவில், பாரதிய கிசான் சங்கத் தலைவர் பூபிந்தர் சிங் மன், சர்வதேச கொள்கைகள் குழுத் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி, விவசாயப் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் கன்வத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதை அடுத்து, சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர் களாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும் என எதிர்க்கட்சிகளும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்தான் வேளாண் சட்டங்கள் தொடர்பான சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவிலிருந்து பூபிந்தர் சிங் விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு விவசாயியாக , ஒரு யூனியன் தலைவராக, வேளாண் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் அச்சத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாதவாறு எனக்கு வழங்கப்பட்ட பதவியைத் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இந்த குழுவிலிருந்து விலகுகிறேன். நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் அறிவித்த நான்கு உறுப்பினர்களில் பூபிந்தர் சிங் மான் தவிர மற்ற மூன்று பெயர்கள் வருமாறு:

சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த பிரமோத் குமார் ஜோஷி வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாதி. மகாராஷ்டிர மாநிலம் சேத்காரி சங்காதனா என்ற விவசாயிகள் அமைப்பின் தலைவராக இருந்த அனில் கன்வத். அனில் கன்வத் சேத்காரி சங்காதனா அமைப்பின் தலைவராக முன்னர் இருந்தது உண்மைதான். கட்சி சார்பற்ற அந்த அமைப்பில் இருந்து அவர் விலகி விட்டார் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அவர் பாரதிய ஜனதா கட்சிக்காக பாடுபட்டார் என்று மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து செய்தி வெளியாகி உள்ளது. என் சொந்த கருத்துக்களை உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் திணிக்காமல் குழுவின் சார்பில் கருத்துக்களை உச்சநீதிமன்றத்துக்கு முன்வைக்க பாடுபடுவேன் என்று அனில் கன்வத் அறிவித்துள்ளார்.

முன்னதாக விவசாயச் சட்டங்களை நீங்கள் ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி உங்கள் கருத்து என்ன என்பதை நால்வர் குழு முன் ஆஜராகி தெரிவிக்க வேண்டும் அந்த குழுவின் நடவடிக்கைகளில் ஊக்கத்தோடு பங்கு கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியது. ஜனவரி மாதம் 12ம் தேதியில் இருந்து 10 நாட்களுக்குள் நால்வர் குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் முதல் கூட்டத் தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் நால்வர் குழு தனது அறிக்கையை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!