போபால் சிறையிலிருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுன்டருக்கு பலி.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்திய சிறையில், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த – அதாவது இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம் (சிமி), கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும்.இருப்பினும், அந்த இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ரகசியமாக இயங்குவதுடன், ஆங்காங்கே நாசவேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி குண்டு வெடிப்பு, கொலை, தேச துரோகம், வங்கி கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட ‘சிமி’ பயங்கரவாதிகள் 8 பேர், பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்தனர்.

simi nov 1

அவர்களில் முகமது அகீல் கில்ஜி என்கிற அப்துல்லா, மெகபூப் குட்டூ என்கிற மாலிக், முகமது காலித் அகமது, முஜீப் ஷேக் என்கிற யூசூப், அம்ஜத் கான், ஜாகிர் உசேன் ஷேக் என்கிற வினய் குமார், அப்துல் மஜித் ஆகிய 8 தீவிரவாதிகள் திங்கட்கிழமை அதிகாலை சிறை தலைமை காவலரை கொலை செய்துவிட்டு, 20 அடி உயர மதில் சுவரை தாண்டி தப்பிச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். தப்பிச் சென்ற தீவிரவாதிகளை பிடிக்க ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஷமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மணிகேதாவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் கிராம மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதல்

அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தபோது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் வரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் இருவர் படுகாயமடைந்தனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உலர் பழங்கள், பிற உணவுப் பொருட்கள் இருந்தன. எனவே சிறையில் இருந்து அவர்கள் தப்பிச் செல்வதற்கு வெளியில் இருந்து சிலர் உதவியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து ஐஜி யோகேஷ் சவுத்ரி கூறும்போது, ”மணிகேதா கிராம மக்களுடன் தீவிரவாதிகள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் மீது கல்வீசித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். அவர்கள் திருடர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்” என்றார்.

4 பேர் சஸ்பெண்ட்

சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக நான்கு போலீஸ் உயரதிகாரிகளை மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் இன்று பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு, சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பியது எப்படி என்பதை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தப்பியது எப்படி?

சிறை கழிவறையில் இருந்து சுவரில் இரும்பு கம்பி மூலம் துளையிட்டு, அதன் வழியாக புகுந்து சிறையின் பிரதான சுற்றுசுவரை தீவிரவாதிகள் அடைந்துள்ளனர். பின்னர் சிறையில் வழங்கப்பட்ட போர்வைகளை பயன்படுத்தி, 20 அடி உயரம் கொண்ட சுற்றுசுவரை தாண்டி குதித்து தப்பிச் சென்றுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2013 அக்டோபரில் காண்ட்வா சிறையில் இருந்து ஜாகிர் உசேன், மெகபூப் குட்டூ மற்றும் அம்ஜத் கான் ஆகிய மூன்று சிமி இயக்கத் தீவிரவாதிகளும் இதே பாணியில் தப்பிச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 2014-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சதியில் தொடர்புடைய ஜாகிர் உசேன், மெகபூப் மற்றும் அம்ஜத் கான் ஆகிய 3 தீவிரவாதிகளும் திங்கட்கிழமை நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்மூன்று பேரையும் சென்னை அழைத்து வருவதற்கான முயற்சியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டிருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.