October 20, 2021

மம்தா போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவை கொல்கத்தா ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் திட்டமிட்டப்படி அங்கு தேர்தல் நடக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் என்பதால், மம்தா பானர்ஜி போட்டியிட வசதியாக , பவானிபூர் எம்எல்ஏவும்,வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது. இந்தநிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்தமனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், திட்டமிட்டபடி செப்டம்பர் 30 ந்தேதி பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.