October 20, 2021

இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் தமிழ்நாடு

சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்.. இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் கேரளா மாநிலம் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் (பப்ளிக் அஃபயர்ஸ் சென்டர் இந்தியா) என்ற அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகின்றது. பெங்களூரில் இருந்து செயல்படும் இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக

பல்வேறு தரவுகளில் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, மின்சாரம், சாலை, குடிநீர், வீடு போன்ற வசதிகள் மக்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. அந்த வகையில், 2018ம் ஆண்டிற்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக கேரளா உள்ளது. முதல் 5 இடத்தில் கேரளாவை அடுத்து தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் உள்ளன.

இதில், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் சமூக பொருளாதார சூழலில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளது. கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் கடந்த ஆண்டும் 4வது இடம் தான் பிடித்து இருந்தது.

இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி வழங்குவதற்கும், திட்டங்களை மக்களை சென்று சேர்வதற்கும் இந்த நிறுவனம் ஆலோசனை வழங்கி வருகிறது. இப்போதைய பட்டியலில் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி , ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீரும் இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

இதில் மிகவும் மோசமான இடத்தை எப்போதும் போல பீகார் பெற்று இருக்கிறது. இதற்கு முன்பாக மூன்று வருடம் வெளியான பட்டயலிலும் பீகார் மோசமான இடத்தையே பெற்று இருந்தது. இந்த முறை பீகார் மிக மோசமாக கடைசி இடத்தை அடைத்து இருக்கிறது.

இதற்கு பல காரணம் சொல்லப்படுகிறது. மாநில அரசின் திட்டங்கள் எதுவும் மக்களுக்கு சரியாக சென்று சேரவில்லை. அதேபோல், மாநில அரசு மக்களுக்காக புதிய சட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. மேலும் அவசர காலங்களில், மக்களுக்கு அரசு உறுதுணையாக செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அரசு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.