November 28, 2021

வாங்க.. வெயில்லே ஒரு ரவுண்ட் போய் வரலாம்: அதனாலே எம்புட்டு நன்மை தெரியுமா?

சுரீரென்று சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது சூரிய ஒளி. ஒவ்வொரு வருஷமும் ‘போன தடவையை விட ஜாஸ்தி வெக்கை’ என்று சொல்வதும் சகஜமாகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை.. மழையை விரும்பும் அளவுக்கு நம் மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. கிராமங்களில் வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு கோடைப்பந்தல் போடுவார்கள். கடைவீதிகளும் நீளமாகப் பந்தல் போடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் கூட வெயிலை அதிகமாக வரவேற்ப தில்லை. கவிமணிகூட “வெய்யிற்கேற்ற நிழலுண்டு’ என்று நிழலையே போற்றிப் பாடினார். ஆனால் பாரதி மட்டும் விதிவிலக்கு. “வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை’ என்கிறது பாரதியின் வசனக்கவிதையில் வருகிற ஒரு பசுமாடு.

வெயில் வருத்துகிறது என்றால் அது நாம் செய்த வினையின் எதிர்விளைவுதான் என்பதையும் மறக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். காடுகளை அழித்து கம்பெனிகளாக்கிக் கொள்கிறோம். விவசாய நிலங்களை அழித்து வீடுகளாக்கிக் கொள்கிறோம். மரத்தையும் காசாக்க நினைக்கிறோம். மரம் இருந்த இடத்தில் கூடுதலாக இரண்டு அறைகள் எடுத்துவிட்டால் வாடகை கிடைக்கும் என ஆசைப்படுகிறோம். இவற்றின் விளைவாக வெயிலை அறுவடை செய்கிறோம். ஆனால் நாம் வசிக்கும் வீடான பூமியின் கூரையாக இருக்கும் ஓசோனில் ஓட்டை விழ காரணமாகிவிட்டோம் என்பதை மறக்கிறோம். வெயிலின் வெம்மை தெரியாமல் இருக்க மரங்கள் நிறைந்த மலைப் பிரதேசத்திற்கு உல்லாச சுற்றுலா சென்றால் மட்டும்போதாது. நாமிருக்கும் இடத்திலும் இயற்கை குளுமையைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுக்க வேண்டும்

இதனிடையே அடேய்..வெயில்ல போகாதே! கருத்துப்போயிடுவே! வியர்குறு வரும்! தலை ஈரமாச் சின்னா நோவு வரும் – இப்படியெல்லாம் சொல்லி சொல்லியே நம்ம பசங்களை வெளியிலே அனுப்புவதில்லை. போதா குறைக்கு இப்போது நாடு முழுக்க அடுக்கு மாடி வீடுகள் வந்து விட்டது ! அந்த பில்டிங் மேல் கூட வெயில் படாது. இதனால நாமும் நம் வீட்டு குழ்ந்தைகளும் எவ்வளவு இழக்கரோம் தெரியுமா! இந்த வெயிலில் அலையாததால் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. சோம்பேறித்தனம் பெருகி விடுகிறது..

ஒரு விஷயம் தெரியுமா? நம் நாடு வெயில் வளம் நிறைந்த நாடு. மற்ற பல நாடுகளுக்கு கிடைக்கப் பெறாத ஒரு அறிய வளம் இது. ஆண்டுதோறும் வெயில் அல்லது வெப்பம் அல்லது உஷ்ணம் இருக்கும் மிகச் சில நாடுகளில் நம் இந்தியாவின் பெயரும் வந்து விடுகிறது. சில நாடுகளில் மாதக்கணக்கில் கூட வெயிலை பார்க்க முடியாது. அப்படிப்பட்ட சிறப்பு நம் நாட்டில் இருப்பதால் நாம் அந்த வளத்தை தக்க முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நவீன காலங்களில் நாம் இந்த வளத்தை அலட்சியப்படுத்துவதில்லாமல் அதை கேவலப்படுத்தவும் முனைகிறோம். பொதுவாக கருப்பாக இருக்கும் மனிதர்கள் வெளுப்பாக இருப்பவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த பொது உண்மையை கூட நாம் புரிந்துக்கொள்ள தவறிவிட்டோம்.

வெயிலின் சிறப்புகளை பற்றி கூற முற்பட்டால் அது நீண்டுகொண்டே போகும். வெயில் ஒரு சிறந்த கிருமி நாசினி. நம் நாட்டில் இயற்கையாகவே துணிகளை வெயிலில் காயவைக்கும் பழக்கம் உண்டு. அது துணிகளில் படிந்துள்ள கிருமிகளை கொள்வதால் படை, தேமல், போன்ற பல வியாதிகளை பரப்பும் கிருமிகள் அழிகின்றன. நவீன காலமாக நாம் வாசிங் மிஷினில் துணி துவைத்து அப்படியே நிழலில் காயப் போடுகிறோம். அதனால் துணிகள் வெளுத்தாலும் அதில் உள்ள கிருமிகள் சாவதில்லை. தொடர்ந்து அவை நோயை பரப்புகின்றன.

உலகிலேயே தானியங்களை பாதுகாக்க வெயிலை அதிக அளவில் பயன் படுத்தும் நாடு நம் நாடுதான். அறுவடை செய்த எந்த ஒரு தானியம் அல்லது பருப்பு வகை ஆகட்டும் அவற்றை நாம் வெயிலில் காய வைத்துதான் பாதுகாக்கிறோம். அப்படி செய்யும் பொழுது அந்த தானியங்களில் உள்ள அதிகப்படியான ஈரம் வெளியேறி அழுகாத தன்மையை அந்த தானியங்களுக்கு அளிக்கின்றது. வீணாக போகும் வெயிலை சேமித்து மின்சாரங்கள் பெறப்படுகின்றன. மின் தேவை அதிகம் இருக்கும் இக்காலங்களில் வெயில் மின்சாரம் நமக்கு ஒரு அரிய வாய்ப்பு.

வெயிலில் வைட்டமின் K என்ற ஒரு அறிய பொருள் கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு தன்மையை கூட்டுகிறது. உடலில் பாக்டீரியாக்கள் தேங்கி தீங்கு இழைக்காத வண்ணம் தடுக்கிறது. வெயில் படும் இடங்களில் சொறி சிரங்கு போன்ற நோய்கள் தோன்றுவதும் தடுக்கப்படுகிறது. வெயிலில் அதிகமாக சுற்றும் போது கண்கள் இயற்கையாகவே அதிக ஒளியை சந்திதக்க வேண்டியிருக்கும். இதனால் கண்களின் பார்வை திறன் கூடுவதுடன் சிறு வயதிலேயே பார்வைக் கோளாறுகள் வருவது தவிர்க்கப்படும்.

நம் தோலில் மெலனின் என்ற ஒரு வகை என்சைம் உற்பத்தி ஆகிறது. அது வெயில் பட்ட உடனே கருப்புதன்மை அடைகிறது. ஆகவேதான் வெயிலில் அதிகமாக சுற்றுபவர்கள் கருப்பாக  இருக்கி றார்கள் . இது இயற்கை தந்த ஒரு வரம். வெயிலின் அதிகப்படியான தாக்கம் நம் உடலுக்கு தீங்கு இழைக்காத வண்ணம் அது காக்கிறது.

நாம் வெயிலின் ஒளி நம் மீது படாமல் இருக்க பலவை கிரீம்கள், பவுடர்கள், லோசங்கள் என்று பல வற்றை பூசிக்கொள்கிறோம். இவற்றால் எந்த பயனும் இல்லை என்பது நமக்கு புரியும் முன்னர் நமக்கு வயதாகி விடும். இவை நமக்கு பண விரயத்தை தருவதோடு இயற்கையாக வெயிலினால் நமக்கு கிடைக்கும் பல அரிய நன்மைகளை தடுத்து விடுகின்றன. வெயிலின் மூலம் நம் உடல் பெரும் எதிர்ப்பு திறனை இவை குறைத்து விடுகின்றன. வெயிலினால் நமக்கு கிடைக்கும் அரிய வைட்டமினையும் இவை தடுத்து விடுகின்றன. இவற்றை பூசுவதால் வியர்வை துவாரங்கள் அடைபட்டு வெளியில் வராமல் போகும். இதனால் நம் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது. காசை கொடுத்து கலியை வாங்கி கொள்வது போன்றது.

வெயிலில் வெளியே போகாமல் இருப்பதால் உடலுக்கு சோர்வு ஏற்படுகிறது. சுறுசுறுப்பு குறைகிறது. முகத்தின் பொலிவு போய் விடுகிறது. முன்பெல்லாம் கைக்குழந்தைகளை காலை வெயிலில் சில நேரங்கள் காட்டுவார்கள். அவர்கள் முகங்களை கௌமியம் (பசுவின் சிறுநீர்) கொண்டு கழுவுவார்கள். இதனால் முகத்தின் சோம்பல் தீரும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம்.

அதனால் நாம் ஒவ்வொருவரும் வெயிலில் உலா போவதை வாடிக்கையாக கொள்ளவேண்டும். காலையிலோ, மாலையிலோ வெயில் நம் மேனியில் படும் வண்ணம் வெளியில் உலவ வேண்டும். வீட்டிலேயோ அல்லது அலுவலகங்களிலேயோ அடைபட்டு கிடப்பதை தவிர்க்க வேண்டும். மதிய வெயிலின் வெப்பம் அதிகம் என்பதால் அதை தவிர்க்கலாம். மாலை வெயில் முற்றிலும் நல்லது. குழந்தைகளை படி படி என்று தொல்லை செய்வதை விட கட்டாயம் மாலைப்பொழுதில் வெயிலில் மற்ற குழந்தை களோடு கலந்து விளையாட பழக்க வேண்டும். அவர்களுக்கு விளையாட்டுடன் அரிய பொக்கிஷமாக வெயிலின் சக்தி கிடைக்கிறது. வெயிலையே பார்க்காமல் இருப்போர் A.C. அறையில் அடைபட்டு கிடக்க கூடாது. அவர்கள் வெயில் படும்படி வெளியில் செல்வதை வாடிக்கையாக கொள்ள வேண்டும்.

நமது சிறுநீரகம், இடைவிடாமல் உடலில் உள்ள கழிவுகளை சிறுகச் சிறுக வடிகட்டி வெளியேற்று கிறது ஆனால் கொளுத்தும் வெயிலோ, சிறுநீரகத்துக்கு சற்று ஓய்வு தருவதுடன் அதிகமான உடல் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றிவிடுகிறது. இப்படி வெளியேற்றும் கழிவில் உடல் உப்புச்சத்தை கொஞ்சம் இழந்துவிடுவதால்தான் நமக்கு தாகம் எடுக்கிறது. அதற்கும் இயற்கையே கொடையாக நுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றை தந்துள்ளது. இவற்றைப் பருகினால் கோடை வெயில் உடலை வறுத்தாது.

அக்காரணம் கொண்டும் சிறு வயதிலிருந்து நம் குழந்தைகளை A.C., Fan, போன்றவற்றிற்கு பழக்க கூடாது. அவர்கள் இயற்கையோடு ஒன்றி வளர பழக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு, வாழ்வில் எத்தகைய கால நிலைகளிலும் இயல்பாக வாழும் மனோதைரியமும் கிடைத்து விடுகிறது. இதையெல்லாம் உணர்ந்ததால்தான் நம் பெரியவர்கள் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றை வைத்திருக்கிறார்கள். சூரியனை நேரே பார்ப்பது. குனிந்து எழுந்து வணக்கம் செய்வது. என்று பல பயிற்சிகளை உள்ளடக்கிய சூரிய நமஸ்காரம் வெளியில் வெயில் படும்படி செய்ய வேண்டிய ஒரு கடமை. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவை தரும் ஒரு பயிற்சி. இத்தகைய சிறப்புகளை உள்ளடக்கிய வெயிலை நாம் உதாசீனப்படுத்தாமல் நம் பிள்ளைகளை வெயிலில் உலவ விட்டு மிகப்பெரிய பயன்களை பெற வேண்டுகிறோம்.

 

டாக்டர் செந்தில் வசந்த்