பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவை இந்திய தூதர் சந்தித்தார்!

பக்கத்து பகையாளி நாடான பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவை திங்களன்று இந்தியத் தூதர் சந்தித்துப் பேசினார்.

நம் தேசிய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. ராணுவ நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பிறகு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது.

இப்படி அதிரடியாக ஒருதலைபட்சமான இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச ஒப்பந்தங்களின் படி, குல்பூஷண் ஜாதவுக்கு வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைதிகளுக்கான வியன்னா ஒப்பந்தங்களின் படி குல்பூஷன் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிறன்று தெரிவித்திருந்தது.

இதன்படி, குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுரவ் அலுவாலியா திங்களன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்தது என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.