சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கும்!-

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கும்!-

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய நாளை தேர்வுக்குழு கூட்டம் நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

crik may 7

வரும் ஜூன் 1-ம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதற்கான அணிகள் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. பங்கேற்கும் மற்ற 7 அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் கடைசி தேதி கடந்தும் அணி விவரத்தை அறிவிக்கவில்லை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) வருமான பகிர்வு தொடர்பான பிரச்சினையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக யூகங்கள் எழுந்தன. ஐசிசி, தனது நிதி அமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டு வந்தது. இதனால் பிக் த்ரீ (Big Three) என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களின் செல்வாக்கு மற்றும் வருமானம் குறையும் நிலை ஏற்படும். இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த மாறுதல்களை எதிர்த்து வருகிறது. இதையொட்டியே தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் – ஐசிசிக்கும் பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்பட்டது.

துபாயில் நடந்த ஐசிசியின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த புது நிதி அமைப்பு, உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தும், நிறைவேற்றப்பட்டது. இந்த கருத்து வேறுபாடால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்தே இந்திய அணி விலகலாம் என்றும் யூகங்கள் எழுந்தன.

புது விதிமுறைகளால், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 277 மில்லியன் டாலர் வரை அடுத்த 8 ஆண்டுகளில் வருமானம் குறைய வாய்ப்பு உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பிசிசிஐயின் (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்துகொள்ள இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்துகொள்ள டெல்லியில் இன்று (நேற்று) நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்போட்டியில் ஆடும் இந்திய அணி திங்கள்கிழமை தேர்வு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!