50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு வைத்துள்ள பிபிசி!

50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு வைத்துள்ள பிபிசி!

இன்று நேற்றல்ல, நமக்கு என்றுமே செய்தி என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஓர் ஊடகம் என்றால், அது பிபிசி என்று சொல்லலாம். அதற்குக் காரணம் ஒரு காலத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள பிபிசி உலகச் சேவையின் செய்திகளையே ஆம், இன்றைக்கும் பலரும் ‘பிபிசி-யிலே சொல்லிட்டாங்க என்று கேஷூவலாக குறிப்பிடுவதைக் கவனித்திருக்கலாம்.

bbc nov 17

தொடக்ககால ஒலிபரப்பு சிறப்பாகவோ சுவாரஸ்யமாகவோ இருக்காது எனத் தலைமை இயக்குநர் ஜான் ரீத் தனது உரையில் கூறினாலும், பிற்காலத்தில் பிபிசி உலகச் சேவை மிகவும் புகழ்பெற்றது. ஒரே சமயத்தில் உலகின் அனைத்து கண்டங்களுக்கும் தனது சிற்றலை சேவையைச் செய்தது,குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிபிசியானது 34 மொழிகளில் ஒலிபரப்பத் தொடங்கியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாய்ஸ் ஆப் ரஷ்யா வானொலியை அடுத்து அதிக மொழிகளில் ஒலிபரப்பும் வானொலியாக பிபிசி கடல்கடந்த சேவை இருந்தது எனலாம்.

ஒவ்வொரு நாளும் 78 செய்தி அறிக்கைகள் 2,50,000 வார்தைகளுக்கு மிகாமல் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்தியாவிற்கான சேவை ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டு இன்று வரை அது ஒலிபரப்பாகி வருகிறது. மேலும் ஐஸ்லாண்டிக், அல்பேனியன், பர்மீஸ் ஆகிய மொழிகளிலும் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இதே காலகட்டதில் பிபிசி தமிழ் மொழியிலும் தனது சேவையை (3 மே 1941) தொடங்கியது. அன்று தொடங்கப்பட்ட சேவை இன்று வரை சிற்றலையில் தொய்வில்லாமல் தொடர்கிறது.

தேம்ஸ் நதிக் கரையிருந்து தேடிவரும் ஓசை, தேன் தமிழில் செய்திபல பாடிவரும் ஓசையான தமிழோசை முதலில் “செய்தி மடல்’ என்ற பெயரிலேயே ஒலிபரப்பாகி வந்தது. தொடக்க காலத்தில் மூன்று நாள்கள் மட்டுமே ஒலிபரப்பப்பட்டது. தமிழோசை தொடங்கப்பட்ட வரலாறே சுவாரஸ்யமானது. இரண்டாம் உலகப் போரின் போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பிரிட்டிஷ் படைகளில் போர் வீரர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கான உள்ளூர் செய்திகளைக் கொண்டு செல்வதற்காகவே முதலில் தமிழ் சேவை தொடங்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் தமிழோசையானது.

நேரடி ஒலிபரப்பு செய்த முதல் வெளிநாட்டு தமிழ் வானொலி என்ற பெருமையும் தமிழோசைக்கு உண்டு. 1983-இல் செயற்கைக்கோள் மூலம் இந்த நேரடி சேவைத் தொடங்கப்பட்டது. 1991-இல் தனது பொன்விழாவை தமிழோசை கொண்டாடியது.இதன் மூலம், பொன்விழா கொண்டாடிய முதல் வெளிநாட்டு தமிழ் வானொலி என்ற பெருமையும் பிபிசி தமிழோசை பெற்றது. இந்த ஆண்டு முதல் வாரத்தின் அனைத்து நாள்களும் தனது சேவையைச் செய்யத் தொடங்கியது தமிழோசை.

பிபிசி உலகச் சேவை தொடங்கப்பட்ட அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழோசையும் தொடங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று 72 ஆண்டுகளைக் கடந்தும் தமிழோசையானது சிற்றலை மட்டுமல்லாமல் இணையம், கைப்பேசி என அனைத்து ஊடகங்களின் வழியாகவும் தனது சேவையைத் தொய்வின்றி செய்து வருகிறது.இப்பேர் பட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி, 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் தனது சர்வதேச சேவையை விரைவில் விரைவுபடுத்தவுள்ளது.

இதுகுறித்து பிபிசி சார்பில் மும்பையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் , “கடந்த ஆண்டு, பிபிசி சர்வதேசச் சேவையை விரிவுபடுத்துவதற்காக, பிரிட்டன் அரசு நிதியுதவி அறிவித்திருந்தது. அதன்படி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் வானொலி மற்றும் வலைதளச் சேவைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டில் (2017) செய்திச் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், இந்தியப் பிராந்தியத்தில் 157 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம், பிரிட்டனுக்கு வெளியே பிபிசியின் மிகப்பெரிய மையமாக தில்லி உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தற்போது, ஹிந்தி, வங்க மொழி, தமிழ் உள்பட 29 மொழிகளில் பிபிசி சேவைகளை வழங்கி வருகிறது. வாரம்தோறும் சுமார் 34.8 கோடி பேர் பிபிசியின் சேவைகளை ரசித்து வருகின்றனர்.பிபிசி-யின் நூற்றாண்டு விழா, வரும் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதற்குள், 50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!