September 18, 2021

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரை விமர்சனம்! – குடும்பத்தோடு பார்க்கத் தக்க படம்!

முழுக்க முழுக்க பொழுது போக்கு சாதமாகி விட்ட சினிமா எத்தனையோ வடிவங்களில் ரிலீஸாவது வாடிக்கை. தேசபக்தி தொடங்கி அட்வென்ஜர் வரை பல ரகங்களில் பல படங்கள் தயாராகி வெளியாகும் சூழ்நில்யில் குழந்தை, குடும்பத்தோடு போய் பார்க்கும் திரைப்படங்கள் மிகவும் குறைந்து விட்டது. அந்த குறையை போக்க வந்துள்ள சினிமாதான் – பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

படத்தின் கதை என்னவென்று கேட்டால் வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற லெவலில் ரியாக்ட் செய்வார். இதனால் பெரிதும் அப்செட் ஆகும் மாஸ்டர் ராகவ், எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகனாக இருக்கிறார்.

இந் நிலையில், பள்ளி விடுமுறையின் போது கராத்தே வகுப்புகளுக்கு செல்கிறார் ராகவ். அந்த வகுப்புகளுக்கு அவரது நெருங்கிய தோழியான பேபி நைனிகாவும் வருகிறார். நைனிகாவின் அம்மா அமலாபால். கணவனை இழந்த அமலாபால் எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பயந்து செய்யக்கூடியவர்.

தனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒரு நாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும் எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை அப்பாவாக அழைக்க ஆரம்பிக்கிறாள்.

அதே சமயம் எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அமலாபாலை ராகவ்வுக்கு பிடிக்கிறது. அவரை அம்மா என்றே அழைக்கிறான்.

இந்த நிலையில், மாஸ்டர் ராகவ்வும், நைனிகாவும் சேர்ந்து, அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகின்றனர். பின்னர் அரவிந்த்சாமி போனில் இருந்து அமலாபாலுக்கும், அமலாபால் போனில் இருந்து அரவிந்த்சாமிக்கும் அவர்களே மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகின்றனர்.

மெசேஜை பார்த்து குழப்பமடையும் அரவிந்த்சாமி, அமலாபால் இடையே காதல் வருகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

வழக்கம் போல் அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடி தூள் கிளப்பும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். அத்துடன், தனது மகனிடம், அவன் சொல்வதைக் கேட்கும் வெகுளியான கதபாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார். அமலாபாலை விட அரவிந்த்சாமிக்கும், மாஸ்டர் ராகவ்வுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சொல்லலாம்.

அமலாபால், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். எதையும் பயந்து செய்யும் சுபாவத்திலும், பாடலில் கவர்ச்சியாகவும் வந்து கவர்கிறார். மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இரண்டு குட்டீஸ்களின் கதாபாத்திரமும் ரசிக்க வைப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

நாசர், விஜயக்குமார் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூரி, ரோபோ சங்கர் நிஜமாகவே சிரிக்க வைக்கிறார்கள் என்று சொன்னால் நம்போணு,. சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

அப்பா மகன், அம்மா மகள் இந்த நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வழக்கமான கதையில் அடிதடியுடன், கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கியிருக்கிறார் சித்திக். அதிலும் காமெடி, ஆக்‌ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

அம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பெயருக்கேற்ற ரசிகன்.

மார்க் 5 / 2.5