125 வக்கீல்கள் சஸ்பெண்ட்! – ஆல் இந்திய பார் கவுன்சில் அதிரடி

125 வக்கீல்கள் சஸ்பெண்ட்! – ஆல் இந்திய பார் கவுன்சில் அதிரடி

தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஒரு பிரிவு வக்கீல்களில் 125 பேரை இடைநீக்கம் செய்ய பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

bar jy 25

சென்னை ஐகோர்ட் குழு அண்மையில் பரிந்துரைத்த வழக்குரைஞர்களுக்கான விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றங்களை திங்கள்கிழமை இன்று (ஜூலை 25) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஒரு பிரிவு வக்கீல்கள் ஏற்படுத்திய “கூட்டு நடவடிக்கைக் குழு’ அறிவித்துள்ளது. இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞர்களின் பெயர் பட்டியலை பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு அதன் உத்தரவின்படி பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு, புதுச்சேரி அண்மையில் அனுப்பி வைத்தது.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பிசிஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் பொதுக்குழுக் கூட்டம், டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மனன் குமார் மிஸ்ரா செய்தியாளர்களிடம், “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம், புதுச்சேரி வக்கீல்களில் ஒரு பிரிவினர் கோர்ட் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். நீதிபதிகளின் கொடும்பாவியை எரிக்கின்றனர். இதுபோன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல்கள், “கூட்டு நடவடிக்கை குழு’ என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வக்கீல்களுடன் சேர்த்துக் கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பிசிஐ பல முறை வலியுறுத்தியும் போராட்டத்தை வழக்குரைஞர்கள் திரும்பப் பெறவில்லை.

இதையடுத்து, வக்கீல்கள் தொழிலின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா சில முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி நீதிமன்றப் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.திருமலைராஜன், எம்.ஆர்.ஆர்.சிவசுப்ரமணியன் உள்பட 21 வழக்குரைஞர்கள், கோயம்புத்தூர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்கள் (தலா 13 பேர்), நாமக்கல், ராமநாதபுரம் (தலா 11 பேர்), தூத்துக்குடி, கரூர் (தலா 10 பேர்), திருச்சி (9), பவானி (5), மதுரை (7), சேலம், ஜார்ஜ் டவுன், சத்தியமங்கலம், கோபி, திருப்பூர் (தலா 2), மேட்டுப்பாளையம், தேனி, தருமபுரி, கோவில்பட்டி, போடி (தலா ஒருவர்) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வக்கீல்களை இடைநீக்கம் செய்ய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மான நகலை சென்னை ஐகோர்ட்டின் தலைமை பதிவாளருக்கு அனுப்பி வைக்க மாநில பார் கவுன்சில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வரும் இன்று திங்கள்கிழமை (ஜூலை 25) முதல் போராட்டத்தில் வக்கீல்கள் யாரேனும் ஈடுபட்டால் அக்காட்சியை விடியோ பதிவு செய்து மேல் நடவடிக்கைக்காக பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மாநில கவுன்சிலை கேட்டுக் கொண்டுள்ளோம். நீடித்து வரும் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர விரைவில் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா குழு சென்னை செல்லவுள்ளது. மூத்த வழக்குரைஞர்கள், மாநில பார் கவுன்சில் குழு ஆகியோருடன் ஆலோசிக்கவும், தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை சந்தித்து பிரச்னையை சுமுகமாகத் தீர்க்கவும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது” என்றார் மனன் குமார் மிஸ்ரா.

இதனிடையே மேற்கண்ட 125 வக்கீல்களின் பெயர்கள் மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் 200-க்கும் அதிகமான வக்கீல்களின் பட்டியலை அகில இந்திய பார் கவுன்சிலுக்கு மாநில கவுன்சில் அனுப்பியுள்ளது. அவர்கள் பணிக்குத் திரும்புவதற்கு வாய்ப்பளிக்க பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகும் போராட்டம் தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

Related Posts

error: Content is protected !!