புத்தகக் கண்காட்சி நடத்தும் நிர்வாகிகளின் ஆணவப் போக்கு! – பதிப்பாளர் ஒருவரின் குமுறல்!

புத்தகக் கண்காட்சி நடத்தும் நிர்வாகிகளின் ஆணவப் போக்கு! – பதிப்பாளர் ஒருவரின் குமுறல்!

நட்புடன் (BAPASI) பப்பாசிக்கு..

இந்த வருடத்தின் தொடக்கமே இப்படியாக இருந்தது.

01.01.2020 மாலை, அந்த குறுஞ்செய்தி. திறந்தேன். சென்னை புத்தக கண்காட்சிக்கு பணம் கட்டி விண்ணப்பித்திருந்த படிவம் நிராகரிக்கப்பட்டதான செய்தி. சற்று அதிர்ச்சியாகதான் இருந்தது. கடந்த வருடம் கலந்து கொண்டேன். ஒரு பிரச்சனையுமில்லை, ஏன் நிராகரிக்க வேண்டும்?

2019-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பங்கெடுத்தேன். வரலாற்று ஆய்வாளர் சமரன் நாகன் எழுதிய, ‘திருவிடரா, திராவிடரா?” என்ற புத்தகத்தை , விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களை வைத்து வெளியிட அழைத்தோம்.

அப்படி வந்தவரை ‘பப்பாசி நிர்வாகிகளே முன்னின்று வரவேற்று அழைத்தார்கள். அங்கேயே இருந்த சிறப்பு அழைப்பாளர்கள் அறையில், தகுந்த மரியாதையை செய்த, பிறகே யாழ் பதிப்பக ஸ்டாலுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த புத்தக வெளியீடு பற்றி மாலை நாளேடுகளில் விளம்பரம்கூட தரப்பட்டது.

அதே போன்று திராவிட ஆய்வாளர் ஐயா திருநாவுக்கரசு எழுதிய, ‘ஆதி திராவிடர் வரலாறு’ என்ற புத்தகத்தை பிரபல திரைப் பட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் எழுத்தாளரும்- பத்திரிகை ாளருமான நண்பர் திருமாவேலன் ஆகியோர் முன்னின்று வெளியிட்ட நிகழ்வும் நடந்தது.

தவிர ஐயா, பெ.மணியரசன்,பாவலர் அறிவுமதி, அரசியல் தலைவர் திருச்சி வேலுசாமி, இயக்குனர்கள் சோழன் மு.களஞ்சியம், கோபி நயினார், வ.கொளதமன், இன்னும் சில முக்கிய நபர்களும் கலந்துகொண்டார்கள். இதையெல்லாம் குறிப்பிட காரணம் ‘யாழ் பதிப்பகம்’ குறித்து பப்பாசியின் கவனத்தை பெற்றிருந்தோம் என்பதற்காகதான்.

இப்போது பழைய தலைவர் மாறி புதிய தலைவர் சண்முகம் அவர்கள் வந்திருக்கின்றார். மற்றபடி முன்பிருந்த- நாம் அறிந்த சிலர் நிர்வாகிகள் அப்படியேதான் உள்ளார்கள். இப்படி அறிந்திருந்தவர் களும் இருக்க, நம்மை புறக்கணிக்க வேண்டிய காரணம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி யோடு அன்று இரவே, பாப்பாசியில் எனக்குத் தெரிந்த சிலரிடம் பேசினேன். ‘என்னிடம் முன் கூட்டியே சொல்லியிருக்கலாமே’ சீனியர் பத்திரிகையாளர்தான். சில முக்கிய புத்தகங்களை கொண்டு வந்தவர்தான் என்று சொல்லியும் எடுபடவில்லை’ என்றபடி கூறி வருந்தினார்கள்.

ஆனாலும் பப்பாசி தலைவர் சண்முகத்திடம் பேசுங்கள், நேரில் சந்தியுங்கள் என்றார்கள். அதனையடுத்து அன்றிரவே பேசினேன். தலைவரின் பேரன் தினேஷ்தான், ‘பார்க்கலாம் வாங்க’ என்றார்.

2-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் சந்தித்தேன். நிறைய பேருக்கு கொடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு ஸ்டால்களை குறைத்துள்ளேன்’. நெருக்கடியாக உள்ளது, யாருக்கு கொடுக்க முடியும். இருந்தால் பார்க்கின்றேன்” என்றவிதமாக ”நீங்கள் என்னென்ன புத்தகத்தை கொண்டு வந்தீர்கள் என்றார். சொன்னேன். பார்க்கலாம், நெருக்கடிதான் புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

அப்போது நாம் தமிழர் கட்சி, தம்பி பாக்கியராசனும் வந்திருந்தார். ‘களம்’ வெளியீடான அவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது. மீற்றொரு சீனியர் பத்திரிகையாளரான மக்கள் செய்தி மய்யம் அன்பு உள்ளிட்ட சிலருக்கும் மறுக்கப்பட்டிருந்தது. என்னிடம் கேட்ட அதே கேள்வியை ‘களம் வெளியீடு’ தம்பி பாக்கியாராசனிடம் கேட்டார். இன்னின்ன புத்தகங்கள்தான் கொண்டு வருகின்றோம் என்றார்.

அதையொட்டி, ஏற்கனவே ஸ்டால்கள் ஒதுக்கி அறிவிக்கப்பட்டு கணினி தட்டச்சு செய்யப்பட்ட பிரதியில், “சீமான் என்னிடம் பேசினார் என்றபடி ‘களம்’ வெளியீட்டை குறித்துக்கொண்டார். அதற்கு மேல் ஒரு பதிப்பகத்தின் பெயரை எழுதியிருந்தார்.

சரி, மூன்றாவதாக யாழ் பதிப்பகம்-ஏகலைவன் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். வாய்ப்பிருந்தால் தாருங்கள் என கூறினேன். தொடர்ந்து நெருக்கடி- பிரச்சனை என்றபடியே, பார்க்கலாம் என்று கூறி அனுப்பினார்.

அன்றிலிருந்து தினமும், தலைவர் சண்முகத்தின் பேரன் தினேஷ் அவர்களுடன் பேசியபடி இருந்தேன். பார்க்கலாம். தருவார்கள் என்றே கூறிவந்தார். இடையில் ஓரிரு முறை தலைவரிடமும் பேசினேன். அதே பதில்தான்.

இறுதியாக 7-ம் தேதி, அன்று தெரிவிக்கின்றோம் என்றார்கள். அன்று மாலை வரை காத்திருந்து ிட்டு, தலைவர் சண்முகம் அவர்களுக்கு பேசினேன். இன்னும் கம்ளீட்டாகவில்லை. நாளை பேசுங்கள் என்றார். என் சார்பாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் (பப்பாசியில் இருப்பவர்) பேசினார். அவரும் காத்திருங்கள் என்றார். 7-ம் தேதி இரவு ஒன்பது மணி வாக்கில் பப்பாசியின் மற்றொரு நிர்வாகியான நக்கீரன் பதிப்பகம் சுரேஷ் அண்ணன் அவர்களும், ‘உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். பிரச்சனை இருக்காது’ என்றார்.

இதற்குள், என்னைப் போல் பட்டியலில் இல்லாத சிலருக்கு ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டிக் கொண்டிருந்ததை அறிந்து இன்று காலை 11 மணி அளவில் தலைவரிடமே பேசினேன். ‘வெளியில் இருக்கின்றேன். நான் சென்றதும் பார்த்துவிட்டு அழைக்கின்றேன். தருகின்றேன’ என்றார் ‘வழக்கம்போல்’!. மதியம் மேலும் ஓரிருவருக்கு ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டதாக செய்தி வந்தது. நமக்கும் தகவல் வரும் என காத்திருந்தேன்.

மதியத்திற்கு மேல் 2-மணி வாக்கில் அவரது பேரன் தினேஷ் அவர்களிடமிருந்து அழைப்பு. எடுப்பதற்குள் மிஸ்டுகால்! திரும்ப பலமுறை அழைத்தேன். எடுக்கவேயில்லை. 3 மணிவாக்கில் அவரே வந்தார். ‘ஏன் அடிக்கடி அழைத்தபடி உள்ளீர்கள். என சலித்துக்கொண்டார். அவரது வேலைபளு அப்படி பேசி இருக்கலாம்.! “இல்லைங்க, உங்களிடம் இருந்து அழைப்பு வந்தது, என்ன ஏது என்பதற்காக திரும்ப அழைத்தேன் என்று கூறினேன். ‘தெரியாம கை பட்டிருக்கும், இருந்தால் கூப்பிடுகிறேன். வைங்க’ என்றார்.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பிரச்சனை “யாழ்’ என்ற பெயரா? அல்லது ஏகலைவன் என்ற பெயரா? அல்லது நான் கொண்டு வந்த புத்தகங்களை? என்றும் தெரியவில்லை.

உள்ளிருந்த நண்பர், ‘சீமான், திருமாவளவன் போன்ற தலைவர்களை பேசச் சொல்லுங்களேன்’ என்றார்கள். அப்படி அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அப்படி சொல்ல வேண்டும் என்றால், நான் விமர்சிக்கும் திராவிட கட்சியிலும் நட்பு தலைவர்கள் உள்ளார்கள். ஏன், பா.ஜ.க.விலும் உள்ளார்கள். அப்படி அழுத்தம்கொடுத்து நான் வாங்க விரும்பவில்லை.

பத்திரிகையாளன். சும்மா ஐந்து புத்தகங்களை கொண்டு வந்துள்ளேன். அதனடிப்படையில் கொடுத்தால் கொடுக்கட்டும். இல்லை என்றால் பரவாயில்லை என கூறிவிட்டேன்.

என்னைப் போன்றவர்களைக் காட்டிலும், இன்னும் தீவிரமான எழுத்தாளர்-பதிப்பாளர்களுக்கு கொடுத்திருப்பார்கள்? அல்லது புத்தம் புதியவர்களுக்கு வாய்ப்பு என்று கொடுத்திருப்பார்கள், நியாயம்தான். அதை கேட்கமுடியாது (பொதுவாகவே பப்பாசியை யாரும் கேள்வி கேட்கமுடியாது. அமைச்சர்களைவிட, ஆட்சியாளர்களைவிட, சட்டமன்றத்தைவிட, நாடாளுமன்றத்தைவிட அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள். அது வேறு விஷயம்) ஆனாலும்,‘இன்று போய் நாளைவா’ என்று, ஏன் அலைகழிக்க வேண்டும் என்பதே மன உளைச்சலாக இருந்தது.

மறுப்பதை (அதற்கான காரணத்தைக்கூட அவர்களிடம் கேட்க முடியாது. அப்படி ஒரு அதிகாரம்) வெளிப்படையாக கூறிவிட்டிருந்தால் இவ்வளவு மன உளைச்சல் ஏன்? இன்று நாளை என கட்டக்கடைசி வரை இழுத்தடிப்பானேன். விடுபட்ட சிலருக்கு ஒதுக்கியும் விட்டு, அதற்கு மேல் இருந்தால் பார்க்கலாம் என்றிருக்கிறார்களா தெரியவில்லை.

அப்படி ஒரு பரிதாப நிலையில் நான் புத்தக ஸ்டால்களை பெற்றுக்கொண்டு அங்கே போய் நிற்க விரும்பவில்லை.

எதுவாகிலும், இத்தனை நாள் உங்களை கேட்டதற்கும், போனில் பின்தொடர்ந்ததற்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாழ் என்ற பதிப்பகமும்- பா. ஏகலைவன் என்ற பெயரும் உங்களுக்கு அடுத்தாண்டும் ‘நெருக்கடி-பிரச்சனையை’ தரலாம். அதனால் நீதிமன்றத்தின் வழியாக வந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டீரகள். அந்த நீதியும் தவறினால்,

புதிய தலைவர் மாறும்வரை காத்திருக்கின்றேன். அவருக்கு மேலும் மேலும் நான் ‘பிரச்சனையை- நெருக்கடியை’ ஏற்படுத்தக்கூடாதல்லவா, அதனால்தான். மற்றபடி அவர் நல்ல மனிதர்தான். அவருக்கு என்ன நெருக்கடியோ…

நன்றி.

பா. ஏகலைவன்

error: Content is protected !!