வங்கிகள் திவால் & நெருக்கடி: தற்போது கட்டுக்குள் இருக்கிறது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி.

வங்கிகள் திவால் & நெருக்கடி:  தற்போது கட்டுக்குள் இருக்கிறது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி.

மெரிக்காவைச் சேர்ந்த மூன்று வங்கிகள் கடந்த ஒரு வாரத்திற்குள் திவாலாகி விட்டன. முதலில் திவாலானது சிறிய அளவிலான மூலதனத்தைக் கொண்ட, சில்வர் கேட் வங்கி. இந்த வங்கி நிழல் பொருளாதாரமான க்ரிப்டோகரன்சி வர்த்தகத்துடன் தொடர்புடையது . அதற்கு அடுத்தபடியாக திவாலானது சிலிகான் வேலி வங்கி. மூன்றாவதாக திவாலான வங்கி சுமார் 10.00 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் கொண்ட சிக்னேச்சர் எனும் இன்னொரு வங்கி.இந்நிலையில், வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை அளித்துள்ளார்.

உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள சுனாமியால் (வங்கிக்கு நெருக்கடி), கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் ‘சிக்னேச்சர்’ வங்கி மூடப்பட்டது. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச பொருளாதார ஆய்வுகட்டுரைகளை வெளியிடும் ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனத்தின் கூற்றுப்படி, ரிபப்ளிக் வங்கியின் பங்குகள் 61.83% அளவிற்கு சரிந்துள்ளன. முந்தைய வர்த்தக நாளில், அதன் ஒரு பங்கின் விலை 19 டாலரை எட்டியது.

சிலிக்கான் வேலி வங்கிக்கும், சிக்னேச்சர் வங்கிக்கும் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் வர்த்தக வீழ்ச்சியால் ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, ஆறு அமெரிக்க வங்கிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கி உள்ளது. இது தவிர, ஜியான்ஸ் பான்கார்ப், வெஸ்டர்ன் அலையன்ஸ் பான்கார்ப், கொமெரிகா இன்க், யுஎம்பி பைனான்சியல் கார்ப் மற்றும் இன்ட்ரஸ்ட் ஃபைனான்சியல் கார்ப்பரேஷன் ஆகியனவும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. அமெரிக்க வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க வங்கி வரலாற்றில், சிலிக்கான் வேலி வங்கி, ‘சிக்னேச்சர்’ வங்கி, ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கிகள் அடுத்தடுத்து மூடப்படுவதால், 2008ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டாவது பெரிய வங்கிகள் மூடல் சம்பவமாகும்.

இதற்கிடையில், அமெரிக்காவில் வங்கித் துறையில் ஏற்பட்ட நெருக்கடியால், மேலும் சில வங்கிகள் மூடப்படலாம் என்று அமெரிக்க மூத்த முதலீட்டாளர் பில் அக்மேன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க நிதித் துறையும், வங்கி ஒழுங்குமுறை அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கையில், ‘சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் முழுமையாக திரும்பக் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தைக் கையாள வசதியாக தற்காலிகமாக புதிய வங்கி சேவையை அமெரிக்க பெடரல் வைப்பீடு காப்பீடு கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ளது. சிக்னேச்சர் வங்கி வாடிக்கையாளர்களும், கடன் வாங்கியவர்களும் தாமாகவே புதிய வங்கியின் வாடிக்கையாளர்களாகி விடுவார்கள்’ என்று கூறியுள்ளது. அதேநேரம் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை அளித்துள்ளார். சிலிகான் வேலி வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும், வரிசெலுத்துவோருக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும், வங்கிகள் வைப்புத்தொகை காப்பீட்டிற்கு செலுத்தும் கட்டணத்தில் இருந்து பணம் வரும் என்றும் பைடன் கூறியிருக்கிறார்.

error: Content is protected !!