தேர்தல் செலவு அதிகமாம் : வங்கிகளில் ரூ70000 கோடி பற்றாக்குறை!

நம் நாட்டில் ;இதுவரை தேர்தல் ஆணையம் சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், 700 கோடி ரூபாய் மதிப்பிலான மது பானங்கள் போன்ற போதை வஸ்துக்கள், வெளிநாட்டு கரன்ஸிகள், கணக்கில் வராத பணம் என பல இடங்களில் இருந்து பறிமுதல் செய்திருக்கிறது. அதே சமயம் இந்த 2019 தேர்தலில் மக்களின் கையில் கடந்த 25 ஆண்டு தேர்தலில் இல்லாத அளவுக்கு பணம் புழக்கம் இருப்பதைக் காண முடிகிறது என்று ஆர் பி ஐ- யே தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் மற்றும் அரசியல் செலவுகள் காரணமாக தற்போது வங்கிகளில் ரூ.70000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியத் தேர்தலில் புழங்கும் பணம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கே சவால் விடும் அம்சமாக திகழ்கிறது என்றால் மிகையில்லை. முந்தைய பல தலைமை தேர்தல் ஆணையர்கள் தாங்கள் ஓய்வு பெறும்போது, தேர்தலில் பணம் புழங்குவதை தடுக்க முடியாமல் போனதை தவிர தங்களுக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை என சொல்லியிருந்தார்கள். இப்படி பணம் புழங்குகிறது என்றாலே தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்றுதான் அர்த்தம். அதை முழுவதுமாக தடுக்காத வரையில் தேர்தலை பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனாலும் தற்போது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஏராளமாக செலவு செய்து வரு கின்றன. அத்துடன் பல கட்சிகளும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்தல் நிதி பத்திரங்களை தேர்தல் செலவுகளுக்காக மாற்றி தங்கள் கணக்கில் ரொக்கமாக்கிக் கொள்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளால் வங்கிகளில் பணப்புழக்கம் மிகவும் குறைந்துள்ளது.தேர்தல் நேரத்தில் இது போல் வங்கிகளில் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம் என்றாலும் தற்போது இது மிகவும் அதிகரித்து உள்ளது. இந்த பற்றாக்குறை இந்த மாதம் 3 ஆம் தேதி ரூ.31,396 கோடியாக இருந்தது. கடந்த 16 ஆம் தேதி அது ரூ.70,226 கோடியாக ஆகி உள்ளது. இந்த பற்றாக்குறை இந்த மாத இறுதிக்குள் ஒரு லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பணம் விளையாடுவதை தடுக்க முடியாவிட்டாலும் குறைக்கவாவது முயற்சி செய்வோமே என்று தேர்தல் ஆணையம் நினைத்து செய்ல்படுகிறது. என்றாலும் நடப்பது குறித்து பேசிய கோடாக் மகிந்திரா வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் உபாசனா பரத்வாஜ், ‘இந்த பற்றாக்குறைக்கு அரசின் செலவுகளும் காரணமாகும். அரசின் இந்த எதிர்பாராத செலவுகளால் வங்கிகள் சரியான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உண்டாகி இருக்கிறது. இந்த வங்கிப் பற்றாக்குறையை தீர்க்க ரிசர்வ் வங்கி நிதி உதவி செய்ய நேரிடும்.’ என தெரிவித்து உள்ளார்.நிதி நிறுவன இயக்குனரான சவும்யஜித் நியோகி, ‘ரிசர்வ் வங்கி தற்போது இதை சமாளிக்க ரெபோ வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது ஓரளவு உதவியாக இருக்கும். தேர்தல் முடிந்த பிறகு இந்த நிலை மாற வாய்ப்புள்ளது. அப்போது செலவுகள் குறைவதால் பண பரிமாற்றம் குறையும் என்பதால் வங்கிகள் பண பற்றாக்குறை நீங்க வாய்ப்புள்ளது’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

ம். பார்ப்போம்