பெங்களூரில் அமைதி திரும்பியது!

காவிரி நதிநீர் விவகாரம் காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒரு வார காலமாக இருந்து வந்த பதற்றமான சூழ்நிலை தணிந்து, தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த நகரமாக பெங்களூருவின் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்களின் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.

ban sep 14

பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், உணவகங்கள் இன்று காலை வழக்கம் போல மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவையும் துவங்கியுள்ளது. சாலைகளிலும் போக்குவரத்து சீரடைந்தது. எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக பதற்றமான இடங்களில் இன்னும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு, 20-ந்தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்ட்டதையடுத்து கன்னட அமைப்பினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பெங்களூர், மைசூர், மாண்டியா மாவட்டங்களில் தமிழர்கள் மற்றும் தமிழர்களின் உடமைகளை குறிவைத்து தாக்கினார்கள். தமிழர்களின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தால் பெங்களூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசு பெங்களூருக்கு 20 கம்பெனி துணை நிலை ராணுவத்தை அனுப்பியது. பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்காக ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர்.
வன்முறையை கட்டுப்படுத்த செப்டம்பர் 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அங்குள்ள 16 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்துநாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்க்கப்படும் பெங்களூரு இன்று வழக்கமான பரபரப்புடன் இயங்க தொடங்கியது. மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டன. வணிக வளாகங்கள் வர்த்த நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல் திறந்திருந்தன.காலை 9 மணியில் இருந்து நகரின் 16 போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டதாக பெங்களூரு நகர கமிஷனர் தெரிவித்தார்.

மேலும், வரும் நாட்களில் எந்த போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த கமிஷனர், வாட்டாள் நாகராஜ் கட்சியினர் நாளை நடத்தவுள்ளதாக அறிவித்த ரயில் மறியல் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்றார். வன்முறையில் ஈடுபட்டதாக 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.