September 23, 2021

பெங்களூரு ஏ.டி.எம்.மில் மூன்றரை வருஷங்களுக்கு முன்னாட்டி வங்கி பெண் அதிகாரியை வெட்டி கொள்ளையடித்தவன் கைது!

பெங்களூரு மிஷன் ரோட்டில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஜோதி உதய். இவர் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் பணம் எடுக்கச் சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர் திடீரென்று ஏ.டி.எம். மையத்தின் இரும்பு கதவை அடைத்துவிட்டு துப்பாக்கி மற்றும் அரிவாளை எடுத்து அவரை மிரட்டி பணம் கேட்டார்.பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர் அரிவாளால் ஜோதி உதயை சரமாரியாக வெட்டி அவருடைய செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த ஜோதி உதய் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 6 மாத தீவிர சிகிச்சைக்கு பின்னரே ஜோதி உதய் உடல்நலம் தேறினார்.

atm feb 5

இந்த சம்பவம் குறித்து எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, ஜோதி உதயை மர்மநபர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மர்மநபரை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முகாமிட்டு மர்மநபரை தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேமராவில் பதிவான மர்மநபரின் உருவப்படத்தை போஸ்டர்களாக வெளியிட்டனர்.

மர்மநபர் பற்றிய விவரங்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 300-க்கும் அதிகமான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறினார்கள்.சில மாதங்களுக்கு முன்பு போலீசார் ஜோதி உதய் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கோர்ட்டில் அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய மர்மநபரை போக்குவரத்து போலீசார் பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.அப்போது, அவருடைய பெயர் மதுக்கர் ரெட்டி என்பதும், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் ஜோதி உதய்யை அரிவாளால் கொடூரமாக தாக்கி கொள்ளை அடித்தவர் என்பதும் தெரியவந்தது. சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் மதுக்கர் ரெட்டி போலீசில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரை மதனப்பள்ளி போலீசார் கைது செய்து பெங்களூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பெங்களூரு போலீசார் மதனப்பள்ளிக்கு விரைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாகவும், ஜோதி உதய் மூலம் அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.இந்த சம்பவத்துக்கு பின்னரே ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகளை கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று நடைமுறைப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.