மூங்கில் – இனி மரங்கள் பட்டியலில் இடம் பெறாது! – ஜனாதிபதி ஒப்புதல்!

மூங்கில் – இனி மரங்கள் பட்டியலில் இடம் பெறாது! – ஜனாதிபதி ஒப்புதல்!

மூங்கில் இனி மரம் இல்லை. மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கில் பெயரை நீக்கி கொண்டு வரப்பட்ட வனச்சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஏழைகள் மரம் என்று அழைக்கப்படும் மூங்கில் இந்திய வனச்சட்டம் 1927ன் படி மரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் 1980ன் படி மூங்கிலை வனங்களில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதை தவிர்க்கவும், வனப்பகுதி தவிர மற்ற இடங்களிலும் மூங்கிலை வளர்க்கவும் வனச்சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது. குறிப்பாக 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த மத்திய அரசின் வாக்குறுதிக்கு மூங்கில் பண்ணை அமைக்கும் தொழில் நல்ல முறையில் உதவும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டு  சட்டத்திருத்தம் தயார் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பப்பட்டது. அதற்குதான் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஆக இனி ,மரங்கள் பட்டியலில் மூங்கில் இடம் பெறாது. இதன் மூலம் அதை வெட்டி, போக்குவரத்து மூலம் பிற இடங்களுக்கு யார் அனுமதியும் இல்லாமல் கொண்டு செல்லவும் இந்த சட்டத்திருத்தம் அனுமதி அளித்து உள்ளது.

இது குறித்து நெடுவாசல் போராட்டம், டெல்டா மாவட்ட எண்ணெய்க் குழாய்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமனிடம் பேசிய போது, “மரங்கள் பட்டியலிலிருந்து மூங்கிலை நீக்குவதற்கு அவசரச் சட்டம் எதற்கு? பல பகுதிகளில் விவசாய நிலங்களில் நெல்லும், வட நாடுகளில் கோதுமையும் விளைகின்றன. தமிழ்நாடு என்றாலே நெல் வயல்கள்தான். தற்போது மத்திய அரசின்இந்தத் திட்டம் நெல் வயல்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி, விவசாய நிலங்களை மூங்கில் காடுகளாக மாற்றவே உதவும். இதுதான் இவர்களின் நோக்கம். ஏனென்றால், நான்கில் ஒரு பங்கு விவசாயம் செய்தால் போதும் என்பதே தற்போதுள்ள அரசின் அணுகுமுறை. மன்மோகன் சிங் காலத்தில் ஐம்பது சதவிகித விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார்” என்கிறார் செயராமன்.

அதாவது தற்போதுள்ள ஆட்சியில் விவசாயத்திற்காக நான்கில் ஒரு பங்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறார். இவர்களின் இந்தத் திட்டத்தினால் நெல் வயல்களில் இனி மூங்கில்கள் பயிரிடப்படும். இதனால், நெல் வயல்கள் அனைத்தும் மூங்கில் தோட்டங்களாக மாறிவிடும். விவசாயிகள் மூங்கில்களை வெட்டி விற்பதால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியே. பல ஆண்டுகள் பொறுத்திருந்துதான் மூங்கில்களை வளர்க்க முடியும். இதனால் லாபம் என்பது நிச்சயம் கிடைக்காது. இதன் விளைவாக, விவசாயம் நின்று போய்விடும். அந்த மண்ணில் மீண்டும் விவசாயம் செய்வது மிகக் கடினம். மண்ணின் தரம் குறைந்துவிடும். அரிசிக்காக நாம் வெளி மாநிலங்களிடம் கையேந்தும் சூழல்தான் ஏற்படும் என்று செயராமன் இந்தத் திட்டத்தின் விளைவுகளை விவரிக்கிறார்.

“மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கிலை நீக்குவது மோசமான திட்டம். தமிழகத்தில் காவிரிப் படுக்கையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நெல் வயல்கள் அதிகம். எனவே, இனி வயல்களில் நெல் இருக்காது, மூங்கில்கள்தான் இருக்கும்”என்கிறார் அவர். சமீபத்தில், ‘நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற புத்தகத்தை வெளியிட்டதற்காக மயிலாடுதுறை காவல் துறை செயராமன் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

error: Content is protected !!