November 27, 2022

பன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி!

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டூடியோவாக இருந்தது விஜயா வாகினி. இதன் உரிமையாளர் பி.நாகிரெட்டி.

ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் பொட்டிபாடு என்ற கிராமத்தில் பிறந்தவர். ெமட்ராஸில் படிப்பை முடித்துவிட்டு, தந்தையின் வெங்காய வியாபாரத்திற்காக பர்மா, சிங்கப்பூர் என வெளி நாடுகள் சென்று அனுபவங்கள் கற்றார்.இவரின் மூத்த சகோதரர் பி.என்.ரெட்டி, ஆரம்ப கால சினிமாவில் முக்கிய பங்காற்றியவர். தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸை’ இயக்கிய ஹெச்.எம்.ரெட்டியிடம் உதவியாளராக இருந்தார்.

பின்னர் ஹெச்.எம்.ரெட்டியும் பி.என்.ரெட்டியும் இணைந்து ‘ரோகிணி பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கி படங்கள் தயாரித்து இயக்கினர். இவர்களுடன் பார்டனராக மூல நாராயணஸ்வாமி என்பவரும் இணைந்து கொண்டார்.இந்த மூவர் கூட்டணியில் வந்த முதல் படம் ‘கிரஹலட்சுமி’. இது 1938ல் தெலுங்கில் வெளியானது.

பின்னர், மூல நாராயணஸ்வாமியும், பி.என்.ரெட்டியும் சேர்ந்து ‘வாகினி பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியை நிறுவினர். வாகினி பேனரில் இருந்து ‘வந்தே மாதரம்’, ‘சுமங்கலி’, ‘பக்த போத்தண்ணா’ உள்ளிட்ட சில படங்கள் உருவாகின. இதில், ‘வந்தே மாதரம்’ படத்திற்கான பப்ளிசிட்டி பணிகளைச் செய்து சினிமா துறைக்குள் வந்தவர்தான் நாகிரெட்டி.

இந்நேரம், ஸ்டூடியோவிற்கான தேவை ஏற்பட வாகினி ஸ்டூடியோ உருவானது. இது மூல நாரா யணஸ்வாமி, பி.என்.ரெட்டி, பி.நாகிரெட்டி என சில பங்குதாரர்களுடன் உதயமானது. ஸ்டூடியோ வின் கட்டடப் பணி 1945ல் ஆரம்பிக்கப்பட்டு 1948ல் முடிவடைந்தது. நாளரு கவனமும், பொழுதொரு பார்வையுமாகப் பார்த்துப் பார்த்து தனது ஸ்டூடியோவை மேலும் மேலும் விரிவாக்கம் செய்தார். ஏழு பெரிய படப்பிடிப்புத் தளங்களையும், அவற்றில் ஒரே சமயத்தில் ஏழு படப்பிடிப்புகள் நடைபெறுவதற்கான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்புக்கான பல எடிட்டிங் அறைகளுடன் கூட படம் பதனிடுவதற்கான சிறந்த ‘லேபொரட்டரி’, மூன்று பாடல் ஒலிப்பதிவுக்கூடங்கள் (சவுண்ட் ரிக்கார்டிங் தியேட்டர்), படம் பார்ப்பதற்கென்று 6 தியேட்டர்கள், அரங்க நிர்மானப் பணிகளுக்கான (செட்டிங்ஸ்) கூடங்கள், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பல ஒப்பனை (மேக்-அப்) அறைகள் அமைக்கப்பட்டன. இத்துடன் ஸ்டூடியோ தொழிலாளிகளுக்கென்று உணவு அருந்தும் கேண்டின், ஆங்காங்கே நிழல் தரும் மரஞ்செடி, கொடிகள் மற்றும் தென்னை மரங்கள் வைக்கப்பட்டன. இத்தகைய அழகிய அத்தியாவசிய அமைப்புகளுடன் கூடிய பிரதான நுழைவாசல் கட்டிடத்தின் மேல் தளத்தில் எல்.வி.பிரசாத், கே.வி.ரெட்டி போன்ற பிரபல டைரக்டர் களின் பெயர்ப் பலகை பதிக்கப்பட்ட தனித்தனி அறைகளும் கட்டப்பட்டிருந்தது.

இது தவிர தங்களின் சொந்தத் தயாரிப்பான தமிழ் – தெலுங்குப் படங்களில் இசை அமைக்கின்ற எஸ்.ராஜேஸ்வரராவ், கண்டசாலா ஆகியோர் இசை அமைத்து, பாடகர்கள் இசை வாத்தியக் குழுவுடன் சேர்ந்து ஒத்திகை பார்ப்பதற்கான பெரிய கூடம் என பற்பல வசதிகளை அமைத்து, இந்தியாவில் மட்டும் அல்லாது ‘ஆசியாவிலேயே மிகப்பெரியதும் பிரமாண்டமானதுமான ஸ்டூடியோ வாகினி’ என்னும் பெயரையும், புகழையும், பெருமையையும் தேடிக்கொண்டார் பி.நாகிரெட்டியார். அவர் தம் வாழ்நாளில் எதையுமே மிகப்பெரியதாகவும், உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் செய்யவே ஆசைப்பட்டு அதற்கேற்ற வண்ணம் திட்டமிடக் கூடியவர். இது அவரை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். பிறகு, வாகினி பிக்சர்ஸும், வாகினி ஸ்டூடியோவும் பரபரப்பாயின.

இது அனைத்தையும் விட நாகி ரெட்டியின் மகத்தான பங்களிப்பு என்பது ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சந்தமாமா என்ற சிறுவர் பத்திரிகையை பல மொழிகளிலும் நடத்தியது தான். 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்தாமாமா என்று தெலுங்கிலும் அம்புலிமாமா என்று தமிழிலும் ஒரே நேரத்தில் சிறார் பத்திரிகையை நாகி ரெட்டி தொடங்கினார்.

1949ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கன்னட மொழியில், 1949 ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மராத்தி மற்றும் மலையாள மொழியில், 1954ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில், 1955ஆம் ஆண்டு ஆங்கிலத்தில், 1956ஆம் ஆண்டு ஒரிய மற்றும் சிந்தி மொழியில், 1972ஆம் ஆண்டு வங்காள மொழியில், 1975ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில், 1976ஆம் ஆண்டு அஸ்ஸாமிய மொழியில், 1978ஆம் ஆண்டு சிங்கள மொழியில், 1984ஆம் ஆண்டு ஸமிஸ்க்ரித மொழியில், சந்தாலி மொழியில் 2004ஆம் ஆண்டு என்று பாரதத்தின் முக்கிய மொழிகளில் எல்லாவற்றிலும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது.

 

நாகிரெட்டி மறைவு நாளையொட்டிய சிறப்புப் பதிவு!