August 17, 2022

நமக்கு குழந்தை பருவம் தொடங்கி பல்வேறு சூழ்நிலைகளில் சொல்லப்படும் பலவித கதைகளில் நாயகனை விட வில்லனுக்கே மவுசு அதிகம். காரணம் நாயகன் எனப்படும் ஹீரோவை உருவாக்கு பவனே வில்லன்தான். அதனால்தானோ என்னவோ ‘ நான் ரொம்பக் கெட்டவன் இல்லே’ என்று சொல்வது பேஷனாகி விட்டது. ஆனால் இந்தக் கெட்டவன் என்பதில் பல பிரிவுகள் இருக்கிறது. அதாவது கேடு கெட்டவன், சாதி கெட்டவன், மானம் கெட்டவன், துப்பு கெட்டவன் என்ற ரீதியில் நீளும் அந்த லிஸ்டில் அயோக்கியதனம் செய்பவனையும் கெட்டவன் பட்டியலில்தான் சேர்த்தி ருப்பார்கள்..அப்பேர்பட்ட டைட்டிலில் நடிகர் விஷால் வழங்கியுள்ள படம்தான் ’அயோக்யா’. ஆனால் இந்த அயோக்யா தப்பு செஞ்சவங்களுக்கு உடனே தண்டனை கொடுக்க வேண்டுமென்ற கோஷத்துடன் வழக்கமான நாயகர்களில் இருந்து வித்தியாசமான கிளைமாக்ஸைக் கொடுத்துத் தனிக் கவனம் பெற்று இருக்கிறார்கள்.

அதாவது அப்பா & அம்மா இல்லாமல் களவாணியாய் வளரும் தக்கணூண்டு விஷால் ரவுடியை விட போலீஸ்காரர்தான் கெத்து என்றும் போலீஸாயிட்டா வழிப்பறியை சட்டப்படி செய்யலாம் என்கிற மன நிலையோடு வளர்கிறார். அதற்க்காக டூப்ளிகேட் சர்டிபிகேட் எல்லாம் ரெடி பண்ணி போலீஸ் இன்ஸ்பெக்ராகவே வேலையில் சேர்ந்து விடுகிறார்.. கூடவே ஆசைப் பட்டது மாதிரி லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறார். அப்படியாப்பட்டவரின் சேவை சென்னையில் ஒரு அரை டிரவுசர் ரவுடியான பார்த்திபனுக்கு தேவைப்படுகிறது. அப்படி சென்னையில் வி ஐ பிகள் மட்டுமே வாழும் நீலாங்கரை ஸ்டேஷனில் பொறுபேற்று தன் குல வழக்கப்படி குற்றங்களை கண்டு கொள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க விடாமல் பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகிறார்.

அவர் கண்ணில் பட்டு தன் சின்னப் பிள்ளைத்தன ஐடியா மூலம் காதலி ஆக்கி கொண்ட ராக்ஷி கண்ணா தனது பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை கேட்கிறார் இந்த பரிசை கொண்டு வருவதற்காக கிளம்பும் விஷாலுக்கு நேரும் அடுத்தடுத்து அக்கிரமங்களே மிச்சக் கதை.

மீதி கதையையும் சொல்வதானால் நான்கு ரவுடிகளிடம் சிக்கி பாலியல் வன்முறைக்கு சின்னா பின்னமாகி கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கால் மனம் மாறும் விஷால், அரை டவுசர் ரவுடி பார்த்திபனை எதிர்த்து அவனது தம்பிகள் நான்கு பேரை அரெஸ்ட் செய்து கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார். ஆனால் கோர்ட்டில் இந்த கொலையாளிகளுக்கு எதிரான ஆதாரம் பப்ளிக் பிராசி கியூட்டர் உதவியுடன் அழிக்கப்பட்ட நிலையில் இந்த காமக் கொடூரரகள் நால்வரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருப்பதற்காக விஷால் எடுக்கும் புது முடிவே கிளைமாக்ஸ்.

சுந்தரத் தெலுங்கில் தயாராகி  மாபெறும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் ‘டெம்ப்பர்’. 2015-ல்   அது வெளியானது. பூரி ஜெகன்னாத் என்னும் நம்மூர் பழைய எஸ் பி முத்துராமன் பாணி யிலான திறமையில் அமைந்த திரைக்கதையும், ஜூனியர் என்.டி.ஆரின் ரகளையான நடிப்பும் அந்தப் படத்தை ‘பிளாக்பஸ்டர்’ வெற்றி லிஸ்டில் சேர்த்தது. வம்சியின் எழுத்துத்திறமைக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு. அப்படியாப்பட்ட சினிமாதான் தமிழில் ‘அயோக்யா’ என்கிற விஷால் முயற்சியில் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநரான வெங்கட் மோகன், ஒரிஜினல் வெர்சனை ரொம்பச் சரியாக காப்பி எடுத்துள்ளார். ஆனால் நம்மூர் டைரக்டர்கள் மாதிரி ‘ஈயடிச்சான் காப்பி மன்னன்’ என்று பெயர் வாங்க விரும்பாமல் கிளைமாக்ஸை துணிச்சலாக மாற்றியுள்ளார். அதற்கு ஹீரோ விஷால் ஓ கே சொன்னதே அவர் இன்னொரு கமல் ஆக தகுதி பெற்று விட்டார் என்பதை நிரூபித்து இருக்கிறது.

ஆனாலும் பக்கத்துச் சீட் ரிவியூர் சொன்னது போல் , ‘தெலுங்கு படத்தின் ரீமேக்தானே.. அதுனாலே படம் முழுக்க தெலுங்கு படம் பார்க்கற மாதிரியான ஃபீலிங்கையே தருது. அவரோட நேட்டிவில் மேரேஜ் பண்ண போற விஷாலின் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஏகப்பட்ட குளறுபடி’ என்பதை பதிவு செய்தே ஆக வேண்டும்.

நடிகர் சங்க தலைவர் விஷால், வழக்கத்துக்கு மாறாக ஓவர் டோஸை காட்டியிருக்கிறார். இன்ஸ் பெக்டர் ட்ரஸை முழுமையாக ஒரு முறை கூட போடாத விஷால் டுப்பாக்கி சகிதம் எப்போதும் சிவந்த கண்களுடன் ரொமான்ஸையும், ஆவேச டயலாக்கையும் ஒரே பாணியில் சொல்லும் விஷால் போக்கே அந்நியமாக இருக்கிறது.

அதே நேரம் அயோக்யனாக இருக்கும் விஷாலை நல்லவனாக மாற்றும் ராஷி கண்ணா, தன் ஸ்மைலி பேஸ் மூலம் கவர்கிறார்.ஆனால் வில்லனாக வரும் அரை டிரவுசர் பார்த்திபன் சரக் கடித்தப்படி, சுருட்டு பிடித்தப்படி தன் தர்போதைய உடல் நிலைக்கு என்ன வருமோ அதை செய்து பெயில் மார்க் வாங்குகிறார். அதே சமயம் ஜஸ்ட்  லைக் போலீஸாக நடித்திருக்கும் கே.எஸ். ரவிகுமார், ஒரு ஹீரோ ரேஞ்சில் தனிக் கவனம் பெறுகிறார்.

இசை சாம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஆனால் இசை படம் பார்க்கும் போது ஒட்டிய அளவு தியேட்டரை விட்டு வெளியேறும் போது மனதில் நிற்கவில்லை. கார்த்திக்-கின் ஒளிப்பதிவு ஓ கே. இந்த படத்தில் அக்‌ஷன் டைரக்டர் என்றொரு ரோல் இயங்கி இருக்கிறது. அவர் புண்ணியத்தில் அடித்து சிதைத்து புதை குழியில் போட்டு புதைக்கப்பட்ட விஷால் கீதை ஸ்லோகத்தை சொல்லிய படி உயிர்தெழுந்து வருவதைக் கண்டு சிலர் கைதட்டினார்கள்.

மொத்தத்தில் கோலிவுட்டில் தனி பெரும் பெயரெடுத்த ஒரு நாயகன் அயோக்யா என்ற பெயரில் எடுத்த படத்தில் ஏன் நடித்தார்? அதை ரிலீஸ் செய்ய ஏன் பெரிதும் மெனக்கெட்டார் என்பதை தியேட்டரில் போய் பார்க்க வைக்கும் படம்தான்

மார்க் 3 /  5