March 22, 2023

லைகா-வுக்கு தமிழ்நாட்டில் முகவரி கொடுத்த என் மீதே புகாரா> – ஐங்கரன் கருணாமூர்த்தி ஆவேசம்!

லைகா நிறுவனம் திரைப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோகங்களில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. பிரமாண்டமான படங்கள் எடுப்பதாக பெயர் எடுத்திருந்தாலும் பல அவப் பெயர் களுக்கு ஆளாகி வருகிரது லைகா. அண்மையில் ஆங்கில சப் டைட்டில் செய்து கொடுத்தவர் முதல் விளம்பரம் போட்ட பல்வேறு இணையதளங்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்து வருவதாக லைகா மீது குற்றச்சாட்டு வரும் நிலையில் இந்நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கருணாமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் பானு மீதே லைகா நிறுவனம் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளது. ஐங்கரன் கருணாமூர்த்தி நிதி மோசடி செய்து விட்டார் என்றும், ரொக்கப் பணக் கையாடல் மூலம் லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்பட்டுத்தி விட்டார் என்றெல் லாம் அந்நிறுவனம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 26 புகார் மனு அளிக்கப்பட்டது. இந்தப் புகார் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் தமிழ் நாட்டில் லைகா-வுக்கு அட்ரஸ் கொடுத்ததே தான்தான் எனவும் ஆனால் அந்த லைகாவில் என்னால் 1000 ரூபாய் கூட தன்னிசையாக செலவு செய்ய முடியாத சூழலில் தற்போது தன் மீது சொல்லப்பட்ட புகார் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தயாராகிறேன் என்று ஐங்கரன் கருணாமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஐங்கரன் கருணாமூர்த்தி  கூறியிருப்பது இதுதான்:

* லைகா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்து படங்கள் தயாரித்து, லாபகரமாக விநியோகம் செய்ய, 32 வருடங்களுக்கு மேல் அனுபவமும், தொடர்புகளும் உடைய கருணாமூர்த்தி என்ற நான் தேவைப் பட்டது. நட்பின் அடிப்படையில் எனது ஐங்கரன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளை யும் நிறுத்திவிட்டு லைகாவிற்குத் தோள் கொடுத்து முன்னணி திரைப்பட நிறுவனமாகக் கொண்டு வர முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன்.

* லைகா என்ற நிறுவனத்தின் எல்லா வகையான பணப் பரிவர்த்தனைகளும் ‘டி.எல்.எஃப்’ என்ற கட்டிடத்தில் சுபாஷ்கரனின் இன்னொரு அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்து லண்டன் அலுவலகத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே அனைத்து செக், டிராஃப்ட் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றிருக்கின்றன. லைகாவின் கன்சல்டண்ட்டான எனக்கு 1000 ரூபாய்க்குக் கூட செக்கில் கையெழுத்திடும் அதிகாரமில்லை. எனவே சுபாஷ்கரனுக்கோ அல்லது அவரது குழும கம்பெனி உறுப்பினர்களுக்கோ தெரியாமல் எந்தவொரு பணப் பட்டுவாடாவும் நடந்ததில்லை.

* ‘எமன்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற 2 படங்களின் மொத்தத் தயாரிப்புச் செலவே ரூ.10 கோடிக்குள் தான் ஆனது. வெளிநாட்டு உரிமை என்பது படத்தின் தயாரிப்புச் செலவில் அதிகபட்சம் 15% வரை மட்டுமே கிடைக்கும். அவ்வாறு கணக்கிட்டால் மேற்சொன்ன 2 படங்களின் வெளிநாட்டு உரிமை அதிகபட்சம் ரூ 1.50 கோடிக்குள்தான் வரும். ஆனாலும், வெளிநாட்டு உரிமைகள் லைகா விடம் ரூ 1.60 கோடிக்கு ஐங்கரன் வாங்கியது. மேற்சொன்ன 2 படங்களின் மொத்தத் தயாரிப்புச் செலவே ரு.10 கோடிக்குள் தான் என்னும் பட்சத்தில், வெளிநாட்டு உரிமை மட்டுமே எப்படி ரூ.95 கோடிக்கு விற்றிருக்க முடியும்? இதுவரை வெளிவந்த எத்தனை பெரிய படமாக இருந்தாலும் அது ரூ.50 கோடிக்கும் குறைவாகத் தான் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டிருக்கிறது. இதனை அவர் முறையாகத் தயாரிப்பு நிறுவனங்களில் பேசி விபரம் அறிந்து கொள்ளலாம். சந்தை நிலவரம் எதுவும் முறையாகத் தெரியாதவர்களின் பேச்சைக் கேட்டுக் குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

* ’கத்தி’ படத்தின் பிரச்சனைகள் அனைவரும் அறிந்ததே. லைகா என்ற பெயர் பொறித்த ஒரே காரணத்திற்காகப் படத்தையே வெளியிட முடியாமல் நிறுத்தி வைக்குமளவுக்குப் பிரச்சனை சென்றபின், என்னுடைய முயற்சியினால் நல்லவிதமாக வெளிவந்து, பெரிய வெற்றி பெற்றது.

* மேலும் லார்ட்ஸ் அண்ட் பர்ட்னர்ஸ் பிராபர்ட்டி மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ் என்ற கட்டிடத் துறையைச் சார்ந்த கம்பெனிக்கு ரூ.25 கோடியை சுபாஷ்கரனுக்குத் தெரியாமல் எப்படி ரூ.25 கோடி ரூபாயைக் கொடுத்திருக்க முடியும்? எந்தக் காரணத்திற்காக அந்தக் கட்டுமானத் துறை கம்பெனிக்கு 25 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார் என்று அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

* ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ மற்றும் ‘இந்தியன் 2’ என்ற இரண்டு திரைப்படங்களை அவருக்குத் தெரியாமலேயே நான் ஆரம்பித்து நஷ்டப்படுத்தியதாகக் குற்றச்சாடு கூறியிருக்கிறார். ஆனால், ஜனவரி 18, 2019 அன்று ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் துவக்கவிழா பூஜைக்கு சுபாஷ்கரன் வந்திருப்பது தற்செயலா? அதுவும் லைகா தயாரிப்பு என்ற பெயர் போட்டு பணம் கொடுத்தது எல்லாம் அவருக்குத் தெரியாமல் தான் நடந்ததா?. வேடிக்கை என்னவென்றால், இப்போதும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவும் அவருக்குத் தெரியாமல்தான் நடக்கிறதா?

* கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி என்னை அழைத்து, மேற்சொன்ன ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்தின் நஷ்டத்திற்கும், ‘இந்தியன் 2’ என்ற படத்தின் ஆரம்ப செலவிற்கும் வட்டியுடன் சேர்த்து என்னிடம் ரூபாய் 13,51,10,800 தொகையினை வற்புறுத்தி என்னை ஏற்றுக்கொள்ளச் செய்தனர். அந்த இடத்தில் எனக்கு வேறு வழி தெரியாததால் நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால், அதன் பின்பு அவர்களின் வேறு வகையிலான அனைத்து நஷ்டங்களையும் என் தலையில் கட்டப் பார்க்கும் சூழ்நிலையை உணர்ந்தேன்.

எனவே, நான் இனியும் அந்த லைகா நிறுவனத்தின் தொடர்வதில் எவ்வித மரியாதையும் இல்லை யென்ற காரணத்தாலும் சுபாஷ்கரன் மற்ற அவருடன் முக்கியப் பதவியில் இருப்பவர்கள் என்னிடம் ஐங்கரன் நிறுவனத்தின் மூலம் எந்தப் புதிய படங்களும் தயாரிக்க வேண்டாம், வெளிநாட்டு உரிமைகள் வாங்கி வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும், அதற்கு ஈடாக லைகா நிறுவனத்தின் லாபத்தில் பங்கு என்ற வாய்மொழி ஒப்பந்தத்தைக் கொடுத்து, அதனைச் சிறிதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலும் நான் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்தேன்.

* நான் 32 வருடங்களுக்கு மேல் போராடி தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக உருவாகியிருக்கிறேன். எனது ஐங்கரன் நிறுவனத்தின் மூலம் இதுவரை 14 நேரடித் தமிழ்ப் படங்களைத் தயாரித்தும் 24 படங்களை முதல் பிரதி அடிப்படையில் வாங்கி வெளியிட்டும், 500 படங்களுக்கு மேல் ஆடியோ உரிமைகளையும் வாங்கியும், 2000 படங்களுக்கு மேலாக வெளிநாட்டு உரிமைகளை வாங்கி வெளியிட்டும் எனது வியாபார சந்தையை விரிவாக்கியிருக் கிறேன். சுபாஷ்கரன் குறிப்பிட்டிருப்பது போல் நான் இந்தத் துறைக்குப் புதிய ஆள் அல்ல. கம்பெனி என்று எதுவுமில்லாமல் வேறு நிறுவனத்தில் வேலை மட்டும் செய்த ஆளும் அல்ல. லைகாவில் இணைந்த பிறகு தான் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்குவதையும், பிசினெஸ் கிளாஸில் பயணிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். கடந்த 30 வருடங்களாக உலகமெங்கும் பிசினெஸ் கிளாஸின் தான் பயணித்து வருகிறேன் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டலில் தான் இதுவரை தங்கி வருகிறேன்.

* தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிகப் பெரிய படமான ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க எந்திரன் என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் விஜய் நடித்த வில்லு, அஜித் நடித்த ஏகன், ஜெயம் ரவி நடித்த பேராண்மை, ஆர்யா நடித்த சர்வம், இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய படம் என புதிய படங்களைத் தயாரித்தேன். மேற்கண்ட அனைத்துப் படங்களும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழ்த் திரையுலக சரித்திரத்தில் இந்த முயற்சி பெரிய மைல் கல்லாகப் பார்க்கப்பட்டது. இந்த சரித்திர சாதனையைக் கொண்டவன் நான்.

* சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் கொடுத்த குற்றச்சாட்டில் சுபாஷ்கரனுக்கு என் பெயரைப் பாழ்படுவதும் நோக்கம் மட்டுமே பிரதானமாக இருப்பதாகப் படுகிறது. மேலும், என் அலுவலகத்தில் பலர் வேலை செய்கிறார்கள். அதில் பானு என்பவரின் பெயரைத் தேவை யில்லாமல் இழுத்து என்னையும் மற்றும் ஐங்கரன் நிறுவனத்தின் பெயரையும் களங்கப்படுத்தியிருக்கிறார். எனது உதவிதான் அவருக்கு தேவைப்படதேயொழிய, அவரது உதவி எனக்குப் பெரிய அளவில் தேவைப்படவில்லை.

* எனது பூர்வீகம், குடியிருக்கும் விபரங்கள், கம்பெனி விபரம் கொடுத்திருக்கும் அவருக்கும் என்னைப் போலவே இலங்கையைச் சேர்ந்தவர். இங்கிலாந்து குடியுரிமை கொண்டவர் மற்றும் இந்தியாவில் கம்பெனி ஆரம்பித்து நடத்துபவர். அவர் ஒன்றும் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து தொழில் செய்பவர் அல்ல. சுபாஷ்கரன் என்னைச் சுரண்டல் பேர்வழி என்ற குற்றச்சாட்டுக் கூறி மிகவும் தரக்குறைவாகவும், பெயரை பாழ் படுத்துமாறும் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், நான் அவரது அளவிற்குத் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.

* நான் எப்போதுமே சட்டத்தை மதிப்பவன். சட்ட ரீதியில் அவரது குற்றச்சாட்டை எதிர்கொள்வேன். அதே நேரம் சுபாஷ்கரனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அவரது தவறான செயல்பாடுகளைப் பொதுவெளிக்கு விரைவில் கொண்டு வரும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என்பதையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஐங்கரன் கருணாமூர்த்தி