March 21, 2023

ஆஸ்திரேலியாவில் முதல் பக்கங்களில் கருப்பு மையுடன் வெளியான நாளிதழ்கள்!

பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தித்தாள்கள் அனைத்தும் தங்களது முதல் பக்க செய்தியை கருப்பு நிற மை பூசி மறைத்து வெளியிட்டன.

போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவுப்பார்த்த அரசு நிறுவனம்’ என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகையாளர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அரசின் முக்கிய விவரங்களை வெளியிட்டதால் சோதனை நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ரகசிய கலாச்சாரம் உருவாகி வருவதாகவும் குற்றம்சாட்டிய பத்திரிகை நிறுவனங்கள், செய்தித்தாளின் முதல் பக்க செய்தியை கருப்பு மையால் பூசி மறைத்து வெளியிட்டன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிகையான தி ஆஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப்பில் அச்சிடப்பட்ட கருப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை (போட்டோவை) ட்விட்டரில் பதிவு செய்தார். மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறீர்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம் உள்ளது’ என தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது என்கின்றனர்.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான், பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” என்றார்.