September 29, 2021

ஆஸ்திரேலியாவில் இருந்த அகதிகளில் 24 பேர் அமெரிக்காவுக்கு ஷிப்ட்!

ஆஸ்திரேலியாவில் சட்டப்படி அகதிகள் குடியேற அனுமதி இல்லை. எனவே ஆஸ்திரேலியாவை படகு மூலம் வந்தடையும் அகதிகள் அந்நாட்டின் மானஸ் தீவு அல்லது பசிபிக் தீவான நவ்ரூவில் உள்ள சிறை முகாம்களில் தங்க வைக்கப்படுவர். தற்போது மானஸ் தீவில் மட்டும் 800 ஆண் அகதிகள் உள்ளனர். நவ்ரூ தீவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 371 அகதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலை மிக மோசமாக உள்ளதாக உலகளவில் பல மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

எனினும் இந்த அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியேற்ற முடியாது என ஆஸ்திரேலிய அரசு உறுதியக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் கடந்த வருடம் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தப்படி ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகளில் 1250 பேர் அமெரிக்காவில் குடியேற்றப்படுவர். ஆனால் இந்தாண்டு அதிபராக பதவியேற்ற டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இது மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம் என டிரம்ப் குற்றம்சாட்டினார். எனினும் வேண்டாவெறுப்பாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற சம்மதம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் இருந்து முதல்கட்டமாக தீவிர சோதனைகளுக்கு பின் சூடான், வங்கதேசம் மற்றும் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட 24 அகதிகள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

மேலும் 30 அகதிகள் நவ்ரூ தீவில் இருந்து சில நாட்களில் புறப்படுவார்கள் என ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார அலுவலர் பெவர்லி தாக்கர் கூறியுள்ளார். அமெரிக்காவில் அவர்கள் எந்த இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல்கள் எதையும் தாக்கர் வெளியிடவில்லை.மானஸ் மற்றும் நவ்ரூ தீவுகளில் வாழும் அகதிகள் தங்களில் சிலர் அமெரிக்காவில் குடியேற போவது எண்ணி மகிழ்ந்தாலும் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.