May 10, 2021

மஹாராஷ்டரா ; தண்டவாளத்தில் ஓய்வெடுத்தோரில் 16 பேர் பலி!

நாடெங்கும் துயர அலை வீசிக் கொண்டிக்ருக்கும் சூழலில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத் அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து அறிந்து மிக வருத்தமுற்றேன். என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்களை விரைவாக மீட்க விரும்புகிறேன். என இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரெயில் ஏறியது. இதில் 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெஞ்சைப் பிளக்கும் இந்த பயங்கர விபத்த இன்று அதிகாலை 5.15 மணிக்கு நடந்தது.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ரெயில்வே அமைச்சர் பியுஸ் கோயலை தொடர்பு கொண்டு பேசினார். ‘‘நிலைமையைக் கண்காணித்து வாருங்கள், அவசியமான உதவிகளை செய்யுங்கள்’’ என்று அமைச்சருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். 16 பேர் பலியான சம்பவம் குறித்து வேதனையும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தங்கியிருந்த மத்தியப்பிரதேச மக்கள் (பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்), ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டனர். அவர்களுக்காக சிறப்பு ரெயில் இயக்கப்பட்ட போதும், பலர் விரைவாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே செல்கின்றனர்.அந்த வகையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரெயில் தண்டவாளத்தை ஒட்டி, ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி நடந்து சென்றுள்ளனர். ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரெயிலும் வராது என்று நினைத்த தொழிலாளர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். நேற்று இரவில் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் தண்டவாளத்திலேயே படுத்துத் தூங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் ஒன்று அவர்கள் மீது ஏறியது. அவர்கள் எழுந்திருப்பதற்குள் இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சம் உதவி: மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு

ரெயில் மோதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.