September 27, 2021

’அத்தைம்மா’ தீபா தமிழகம் முழுக்க பராக், பராக், பராக்! –

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தற்போது சிலர் “அத்தைம்மா” என்று அழைக்கத் தொடங்கி உள்ளார்கள். இவர் பிப்ரவரி 5ஆம்தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று தனது அரசியல் முடிவை அறிவித்த அவர் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தீபா பிப்ரவரி 5ஆம்தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

deepa jan 31

5ம் தேதி திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை நடத்து உள்ளாராம். இதேபோல் தமிழகம் முழுவதும் 6 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்யும்போது அந்த மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுப்பயணத்தின்போது தீபா கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விண்ணப்பம் ஒன்று வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு நிர்வாகியும் தாங்கள் அ.தி.மு.க.வின் கிளைக்கழகத்தில் எந்த பதவியை வகிக்கிறோம் என்பதை எழுதி, நான் இன்று முதல் தீபாவின் ஆதரவாளராக அவரது தலைமைய ஏற்று பணி செய்ய உறுதி ஏற்கிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை தீபா பெறுகிறார்.

இதையொட்டி தீபாவின் பாதுகாப்புக்காக அவரது தீவிர ஆதரவாளர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.6 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிய பின்னர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியன்று தனது புது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.