அத்திவரதரின் சயனக்கோலம் இன்று நிறைவு: நாளை முதல் நின்ற கோலம்!

அத்திவரதரின் சயனக்கோலம் இன்று நிறைவு: நாளை முதல் நின்ற கோலம்!

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் ஆதி மூர்த்தியான அத்திவரதர், ‘அனந்தசரஸ்’ திருக் குளத்தில் வாசம் செய்கிறார். தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளி யேறி, கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் அங்கு சயனக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதைக் காண அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சேவித்த நிலையில் இந்த பெருவிழா 31-ஆவது நாளான இன்று புதன்கிழமையுடன் பெருமாள் சயனக்கோலக்காட்சி நிறைவு பெறுகிறது. நாளை முதல் இந்த பெருமாள் நின்ற கோல ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இன்று மதியம் 12 மணி வரை மட்டுமே பொது தரிசனம் வழியாக அனுமதிக்கப்பட இருப்பதுடன், கோயில் கிழக்கு கோபுர வாசலும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஜூலை முதல் தேதி முதல் சயனக்கோலத்தில் காட்சியளித்த பெருமாள் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து 17 நாட்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் கோயிலின் கிழக்குவாசல் புதன்கிழமை மதியம் 12 மணியுடன் மூடப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் புதன்கிழமை மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். மதியம் 3 மணிக்கு மேல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது தரிசனப் பாதையில் செல்லக்கூடிய பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சயனக்கோலக் காட்சி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, நாளை வியாழக்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

அத்திவரதப் பெருவிழாவின் 30-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அத்திவரதர் சயனக் கோலத்தில் இளம் நீல நிறப்பட்டாடை அணிந்தும், அதே நிறத்தில் அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்ட செண்பகப்பூ மாலை, அத்திப்பழ மாலை, மல்லிகை மற்றும் சம்பங்கி மாலைகளும் அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் அத்திவரதர் உருவப் புகைப்படமும், பிரசாதமும் வழங்கினர். திருக்கோயிலில் 10 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர, மேலும் 3 உண்டியல்கள் வைக்கப்பட்டன.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நிருபர்களிடம், “ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி அதிகாலை 5 மணியில் இருந்து, ஏப்போதும் போல் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

3ம் தேதி அன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால், மதியம் 3 மணிக்கு கோபுர கதவு அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் இரவு 8 மணியில் இருந்து மீண்டும் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதேபோல், ஆகஸ்ட் 15ம் தேதி ஆடி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளதால், அன்று மாலை 5 மணிக்குமேல் அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. இதற்கு பாதுகாப்பு ஏற்பாடாக 2 ஐஜிக்கள் 3 டிஐஜிக்கள் 16 டிஎஸ்பிக்கள், 5100 காவலர்கள் உள்ளனர்.

அத்திவரதர் நின்ற கோலத்தில காட்சியளிக்கும் தினத்தில் மேலும் 3 ஆயிரம் காவலர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார்.

error: Content is protected !!