September 17, 2021

பிரான்ஸ் ; பயங்கரவாதி டிரக்கை ஓட்டிச் சென்று 80 பேர் படுகொலை!

பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொதுநிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 80 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். ஆனால் அந்த நபர் யார் என்ற அடையாளம் இதுவரை தெரியவில்லை.

fran jy 15

சம்பவம் குறித்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “பேஸ்டைஸ் தினத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கனரக லாரி ஒன்று தாறுமாறாக மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் லாரி ஓட்டுநர் வேகமாக செலுத்த எதிரே சிக்கியவர்கள் அனைவரும் பலியாகினர்” என்றார்.

பிரான்ஸில் பல நூற்றாண்டுகாலமாக நீடித்து வந்த மன்னராட்சி முறைக்கு முடிவு கட்டும் விதமாக நடந்ததுதான் பிரெஞ்சு புரட்சி. உலகில் மன்னராட்சி முறைகளுக்கு எதிராக பெரும்பாலான புரட்சிகளுக்கு பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு. கம்யூனிசம் பேசிய ரஷ்யாவிலும் சீனாவிலும் கூட பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு. இந்த பிரெஞ்சு புரட்சியுடன் பிரான்ஸில் மன்னராட்சி முறை, கிறித்துவ திருச்சபைகளின் அதிகாரம் அத்தனையும் மண்ணோடு மண்ணாகிப் போயின.

“பிரான்ஸின் மன்னர் பதினாறாம் லூயி கில்லட்டின் இயந்திரத்தின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது” என நாம் வரலாற்றுப் பாடங்களில் படித்த சம்பவம் நிகழ்ந்ததும் இந்த பிரெஞ்சு புரட்சியின் விளைவுதான்… மெல்ல மெல்ல பிரான்ஸ் மன்னருக்கும் திருச்சபைக்கும் எதிராக உருவெடுத்த கிளர்ச்சிகள் உச்சத்தை எட்டிய நாள் 1789-ம் ஆண்டு ஜூலை 14.

பிரான்ஸ் மன்னர், திருச்சபைகளின் அதிகாரச் சின்னமாக இருந்தது பாஸ்டில் சிறையில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்குதான்… இந்த ஆயுதக் கிடங்கைதான் பிரெஞ்சு புரட்சியாளர்கள் இலக்கு வைத்தனர். 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி இந்த பாஸ்டில் சிறையை தகர்த்து புரட்சியாளர்கள் தங்கள் வசமாக்கினர். இதுதான் பிரெஞ்சு புரட்சியின் உன்னதமாக கருதப்படுகிறது.

இதுவே பிரான்ஸில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலருவதற்கு அடித்தளமாக இருந்தது. ஆகையால் இந்த நாளை தங்களது நாட்டின் ‘தேசிய தினமாக’ கொண்டாடி வருகின்றனர் பிரான்ஸ் நாட்டு மக்கள்.நமது நாட்டின் குடியரசு தினம் போல இந்த பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் அல்லது பிரான்ஸின் தேசிய தினத்தில் அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு நடைபெறும். முக்கிய நகரங்களில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இது பிரான்ஸ் மக்களுக்கு மரியாதைக்குரிய ஒரு விடுமுறை நாள்.

பிரான்ஸின் பெருநகரங்களில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவர்… இப்படி மக்கள் ஒன்றுகூடுவதையே தங்களது இலக்காக வைத்து படுபயங்கரமான தாக்குதலை நடத்தி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை கருப்பு தினமாக்கிவிட்டனர் ஐஎஸ் கொடியவர்கள்.