May 15, 2021

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் பூகம்பம்: 35 பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் மருத்துவமனை மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலியானார்கள். பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தினால் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்ட மானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதே போல் அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதேபோல் கவர்னரின் அலுவலகம் மற்றும் பல்வேறு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.