November 27, 2022

அமெரிக்காவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டேயில் ரோப்(Robb) என்ற தொடக்கப்பள்ளிக்குள், கையில் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர், குழந்தைகள் என்றும் பாராமல் சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான். இதில் 19 குழந்தைகள் மற்றும் மூன்று ஆசிரியர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 18 வயதான இளைஞர் என்றும், பதில் தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க பள்ளிகளில் நிகழும் 27ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், உவால்டேயில் பள்ளிக்குள் நுழைந்து 19 பச்சிளம் பாலகர்களை துப்பாக்கித் தோட்டாவுக்கு பலியாக்கிய 18 வயது கொலைகாரன் சால்வடார் ரொலாண்டோ ரேமோஸ் என்பவன் சிறு வயதில் திக்குவாய் என்பதால் பள்ளியிலும் சமூகத்திலும் கடும் கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளானவன் என்பதால் எப்போதும் கடும் கோபத்துடனும் மனநிலை பிறழ்ந்த செயல்களிலும் ஈடுபடுபவர் என்று அவருடன் ஆரம்பத்திலிருந்தே படித்த சக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

18 வயதே நிரம்பிய ஒருவனுக்குள் இத்தனை கொடூர எண்ணமா என்றால் நம்ப முடிகிறதா? முதலில் தன் பாட்டியை சுட்டுக் கொன்றான். பிறகு அப்பகுதியில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று தான் வந்த வண்டியை அப்படியே விட்டு விட்டு பள்ளிக்குள் நுழைந்தான். பச்சிளம் பாலகர்களை சுட்டுக்கொன்றான் 19 குழந்தைகள் 2 பெரியவர்கள் இதில் பலியாகினர், இவனும் போலீசாரால் கொல்லப்பட்டான். இந்த வெறித்தனம் சிறு வயது முதலே இருந்து வந்திருக்கிறது.

கொலைகாரன் ரேமோஸை சிறு வயது முதலே அறிந்த சாண்டோஸ் வால்டேஸ் என்ற அவரது நண்பன், கொலைகாரனின் நடத்தை சிறிது காலமாகவே ரொம்ப மோசமாகிப் போனதாக அமெரிக்க ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்., பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது எனவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அமெரிக்காவிற்கு தைரியம் உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.