லெபனான்: பெய்ரூட் நகரில் பயங்கர வெடிவிபத்து 100 பேர் பலி – வீடியோ!

லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் ஏர்பட்ட வெடிவிபத்து நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் முதல்கட்ட தகவலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடித்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. . இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்தியதரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபானான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து சாலையிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களை கொண்டு சென்றன.சிறிது நேரத்தில் மருத்துவமனைகளில் அனைத்து இடங்களும் நிரம்பியதால், காயமடைந்தவர்களை சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெய்ரூட் நகரில் நடந்தது வெடிவிபத்தா அல்லது இஸ்ரேல் நடத்திய தாக்குதலா என்ற கேள்வி வெடிச்சத்தம் கேட்டதும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், தாங்கள் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை, எங்கள் விமானம் அங்கு செல்லவில்லை என்று இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், பெய்ரூட் நகரில் உள்ள பழையான கோட்டையில் இருந்து ஆரஞ்சு நிறத்தில் புகை மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டம் போல் வெடிச்சத்தம் கேட்டபின் மேலே எழுந்தது என்று அதைப் பார்த்த மக்கள் தெரிவித்தனர், பல்வேறு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் வெடிச் சத்தம் கேட்டபின் நகரில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிக் கதவுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன.இந்த வெடிவிபத்துக்கு உண்மையான காரணம் இதுவரை அந்நாட்டு அரசால் முழுமையாகக் கண்டுபிடித்து வெளியிடப்படவில்லை.

ஆனால் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பெய்ரூட் நகரில் உள்ள பழமையான கோட்டையில் மிகப்பெரிய வெடிமருந்து கிட்டங்கியை அரசு செயல்படுத்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கடற்பகுதியில் ஒரு கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது, அதில் இருந்த ஏராளமான ஆபத்தான வெடிமருந்துகள் இந்த கோட்டையில் சேமித்து வைக்கப்பட்டன. இந்த வெடிமருந்து வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் ஹமாத் கூறுகையில் “ இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு அவசர மீட்புக் குழுக்கள் பெய்ரூட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. காயமடைந்தவர்கள் வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ராணுவஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த மோசமான வெடிவிபத்தால் பெய்ரூட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளும் மோசமாகச் சேதமடைந்தன. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க முடியாத நிலையில் வேறு நகரத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

பெய்ரூட் கடற்கரையில் கொரோனா வைரஸ் சூழலில் உதவுவதற்காக ஐ.நா. அமைதிக்குழுவின் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வெடிவிபத்தில் அந்த கப்பலும், கப்பலில் இருந்த ஏராளமான பணியாளர்களும் மோசமாக காயமடைந்துள்ளனர்.