சிஎஸ்கே அணியின் வேகப் பந்து வீச்சாளர் உள்பட பலருக்கும் கொரோனா!

சிஎஸ்கே அணியின் வேகப் பந்து வீச்சாளர் உள்பட பலருக்கும் கொரோனா!

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக துபை சென்றுள்ள சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சில உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் துபை மற்றும் அபுதாபிக்குச் சென்று சேர்ந்துள்ள நிலையில். அனைவரும் ஆறு நாள்களுக்கு நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர இதர அணிகள் அனைத்தும் இன்று மற்றும் நாளை முதல் தங்கள் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளன. அதாவது துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணி, தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தைத் திடீரென நீட்டித்துள்ளது. இன்று முதல் பயிற்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் பயிற்சியை ஆரம்பிக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. துபைக்கு வந்துள்ள ஐபிஎல் அணிகள் ஆறு நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் என்ன காரணத்துக்காக சிஎஸ்கே அணியினர் பயிற்சியை ஆரம்பிக்காமல் விடுதியில் தொடர்ந்து தங்க முடிவெடுத்துள்ளார்கள் என்பது கேள்வியை வரவழைத்துள்ளது. சிஎஸ்கே அணியின் இந்த நடவடிக்கை குறித்து சிஎஸ்கே தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் துபை நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபையில் உள்ள சிஎஸ்கே உறுப்பினர்கள் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில நாள்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறியப்படுகிறது. சிஎஸ்கேவைச் சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

error: Content is protected !!