March 22, 2023

நம் இந்திய சினிமாக்களில் ஆரம்பத்தில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் அதன் கிளைக் கதை கள்தான் அதிகம் இடம் பிடித்து வந்தன. அதன் பிறகு சில பல நாவல்கள் & சிறுகதைகள் படமானது. ஹிட்-டும் அடித்தது. அதே சமயம் ‘நாவல்களுக்கும் சினிமாவுக்கும் ராசி இல்லை’ என்று பெரும் பாலான ரசிகர்கள் கருதுகிறார்கள் என்று ஒரு சேதியை சிலர் பரப்பினாலும் பல நாவல்கள், சினிமா வாகத் தயாரிக்கப்பட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளது.ஆனால் இன்றைக்கு கோலிவுட் சினிமா தொழில்நுட்ப அளவில் நன்றாக வளர்ந்து ஹாலிவுட் சினிமாவோடு போட்டி போடும் அளவுக்கு வளர்ந்து விட்டாலும், கதைகளுக்காக மெனக்கெடும் போக்கு மிக அரிதாகி விட்டது. தங்கள் சினிமாவின் டைட்டிலுக்கே புதுசா யோசிக்கும் திராணியில்லாமல் முன்னொரு சமயம் ரசிகர் களிடையே ஊடுருவிய தலைப்புகளை வைத்து சிலாகிக்கும் நாயகர்களுக்கு மத்தியில் ஒரு பக்கா நாவலில் பலரும் பார்க்க வேண்டிய கதையின் நாயகனாக நடித்து அசத்தி இருக்கிறார் தனுஷ்.

நம் தமிழ் வாசிப்பாளர்களில் ’வெக்கை’ நாவல் படித்தவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்தான். ஒரு கொலையைக் கொண்டாடும் குடும்பத்தை தனது ‘வெக்கை’ நாவலில் விவரணையாக சொல்லி சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார் எழுத்தாளர் பூமணி. அதாவது ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் தனது அண்ணனின் கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் ஒரு கொலையைச் செய்கிறான். அது அவனது குடும்பத்தில்  மகிழ்ச்சியை கொடுத்ததை நம்பும்படியும் பின்னர் மனம் மாறி தென் தமிழகத்தின் வறண்ட கரிசல் பூமியில் வாழப் போராடும் போக்கையும் அந்த ‘வெக்கை’ நாவலில் சரளமாக சொல்லி இருப்பார் பூமணி. அப்பேர்பட்ட வெக்கை நாவல்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘அசுரன்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. ஆனால் வாசகர்களும் ரசிகர்களும் ஒன்றில்லை என்பதை நன்றாக உணர்ந்துள்ள வெற்றி மாறன் இப்படத்தின் டைட்டிலில் ஆங்கிலத்தில் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றும், மூலக்கதை என்று தமிழிலும் போட்டு சமாதானப்படுத்தி வெற்று இரைச்சல்களிலிருந்து தப்பி விட்டார்.

தனுஷ் சிவசாமி என்கிற பொறுப்பான குடும்பத் தலைவன், ஆக்ரோஷமான இளைஞன் என இரண்டு கேரக்டரில் வந்து முழு படத்தை தாங்குகிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர், திருநோலி பொண்ணு கதாபாத்திரத்திற்கு தன்னை பொருத்தமாக்கி கொண்டார். தனுஷின் மூத்த மகனாக நடித்திருக்கும் டீஜெய் அருணாசலமும், இளைய மகனாக நடித்திருக்கும் கென் கருணாஸும் கதையோட்டத்தை தெளிந்த நீரோடையாக்கி கொண்டு செல்ல உதவுகிறார்கள்.

காய்ந்த மலைகள், காடுகள், கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடி வாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு, சாலைகள், கிராமங்கள் என்று ஒவ்வொன்றையும் கண் முன் கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவாளர் வேல்ராஜூன் விஷூவல் டோன் மாற்றம் கொஞ்சம் உறுத்தலை கொடுக்கிறது. இசை ஜி.வி.பிரகாஷ் அடடே சொல்ல வைக்கிறார்.. ஆனால் பாடல் ஒன்றும் தியேட்டரை விட்டு வெளியேறும் போது முணு முணுக்க வைக்க வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நன்றாக படிக்கும் மாணவனிடம் அவனுக்கு பிடித்த சப்ஜெக்டில் எப்போது டெஸ்ட் வைத்தாலும் தனி ஸ்கோர் செய்யும் மாணவன் மாதிரி வெற்றி மாறன் இப்போது எடுத்துக் கொண்ட கதையை சிறப்பாக கொடுத்திருக்கிறார்தான்.. ஆனால் வன்முறையையும், ரத்தத்தையும் கொஞ்சம் அளவுக்கு மீறி எக்ஸ்போஸ் பண்ணி இருப்பதை தவிர்த்து இருக்கலாம்..!

மார்க் 3.5 / 5