அசாம் வாரச் சந்தையில் தீவிரவாதிகள் புகுந்து சுட்டதில் பலர் பலி:
அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் இருந்து வடக்கே 12 கி.மீ. தொலைவில் பலஜன் டினியாலி என்ற இடத்தில் நேற்று வாரச் சந்தை நடைபெற்றது. சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் இங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில் பகல் 12.30 மணி அளவில் ஒரு வேனில் இங்கு வந்திறங்கிய தீவிரவாதிகள், பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். ஒரு தீவிரவாதி கையெறி குண்டை வீசியதாகவும் கூறப்படுகிறது.இதில் 12 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட் டோர் காயம் அடைந்தனர்.
அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.மேலும் 4 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.இந்த தாக்குதலை என்டிஎப்பி-எஸ் தீவிரவாதிகள் நடத்தியதாக கருதுவதற்கு போதிய முகாந்திரம் உள்ளது என அசாம் காவல்துறை இயக்குநர் முகேஷ் சாஹே கூறினார்.
இறந்தவர்களில் ஒருவர் பெண். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 6 ஆண்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சம்பவத்தை நேரில் பார்த்த மாணிக் தேவ்நாத் என்ற கடைக்காரர் கூறும்போது, “சுமார் 5 தீவிரவாதிகள் ராணுவ சீருடையில் ஒரு வேனில் வந்திறங் கினர். அவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியிருந்தனர். பொது மக்களை நோக்கி தொடர்ந்து 15- 20 நிமிடம் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு தீவிரவாதி கையெறி குண்டை வீசியதில் 8 கடைகள் தீப்பற்றி எரிந்தன. மக்கள் அச்சத்தால் அலறியடித்து ஓடினர்” என்றார்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
இந்த தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது. “பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிரவாத அமைப்புக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று முதல்வர் சர்வானந்த சோனோவால் உறுதி கூறியுள்ளார்.
பிரதமர் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், “கோக்ரஜார் தாக்குதல் பற்றி அறிந்து கவலை அடைந்தேன். இத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தின ருக்கு எனது கவலையை தெரிவிக்கிறேன். காயம் அடைந்த வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அசாம் அரசுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருந்து வருகிறது. அங்குள்ள நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.