March 22, 2023

NDTV India விலை போயிடுச்சு.. அதானி வாங்கிப்புட்டார்!- முழு விபரம்!

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் அதானியின் குழுமம் கடந்த பல மாதங்களாக ஊடகத் துறையில் கால் பதிக்கும் முயற்சிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது ஊடக நிறுவனமான அதானி மீடியா வென்ச்சர்ஸை வழிநடத்த மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் புகாலியாவை நியமித்தது. அந்த அதானி மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட் (AMVL), குழுமத்தின் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) கீழ் உள்ள ஊடகப் பிரிவான Quintillion Business Media Pvt Ltd (QBM) என்ற டிஜிட்டல் வணிக செய்தி தளத்தை போன ஆண்டு வாங்கியது. இந்நிலையில் என்டிடிவி எனப்படும், ‘புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட்’ செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழும நிறுவனம் ஏற்கனவே மறைமுகமாக வேறு நிறுவனங்களின் மூலம் வாங்கி விட்டது. தற்போது, அதன் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதை வாங்கினால், என்டிடிவி.யில் 55 சதவீத பங்குகளுடன், அதானி குழுமம் முதன் பங்கு நிறுவனமாக மாறும் என்ற சூழலில் இந்திய ஊடக உலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய நம்பர் ஒன் பணக்காரரனான கவுதம் அதானி தனது குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு பல்வேறு புதிய தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே 5ஜி அலைக்கற்றை ஏலம், இலங்கையில் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில் அதானி குழுமத்தின் ஓர் அங்கமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் தற்போது ஊடகத்துறை சார்ந்த முன்னணி குழுமமான என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகளை கையகப்படுத்த உள்ளது. இதன் மூலம் அது மீடியா துறையில் முகேஷ் அம்பானிக்கு பெரும் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்டிடிவி நிறுவனம் என்டிடிவி இந்தியா, என்டிடிவி 24/7 மற்றும் என்டிடிவி ப்ராஃபிட் ஆகிய மூன்று முன்னணி செய்தி நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

ஆனால் புது தில்லி டெலிவிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கப்போவதாக கவுதம் குழுமம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, என்டிடிவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஆச்சரியத்தை ஏர்படுத்துவதாக இருக்கிறது. செவ்வாய்கிழமை (2022 ஆகஸ்ட் 23) அறிக்கை ஒன்றை வெளியிட்ட நியூ தில்லி டெலிவிஷன் லிமிடெட் (New Delhi Television Limited) பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியது தொடர்பாக, அதன் நிறுவகத் தலைவரர்களான ராதிகா மற்றும் பிரணாய் ஆகியோருக்கு எந்த விவரமும் தெரியாது என்றும், இது தொடர்பாக அவர்களுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று கூறியது.

RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை வாங்கியுள்ளதாக விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிறுவனம் என்டிடிவியில் 29.18% பங்குகளை வைத்துள்ளது. அதன் அனைத்து ஈக்விட்டி பங்குகளையும் விசிபிஎல் நிறுவனத்திற்கு மாற்ற இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவன மேம்பாட்டாளர்களுடன் எந்தவித கலந்தாலோசனையும் நடத்தாமல், ஆர்ஆர்பிஆர் ஹோலிடிங் பிரைவெட் லிமிடெடின் 99.50% பங்குகளை பெறுவதற்கான உரிமையை பெறுவது என்பது என்டிடிவி நிறுவனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்ஆர்பிஆர் ஹோலிடிங் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய கடன்களை பங்குகளாக கொடுத்தது பற்றி தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை கார்ப்பரேட் நிறுவனமான அதானி மீடியா குழுமம் வாங்க உள்ளது. இப்படி பங்குதாரர்களின் ஒப்புதல் இன்றி வாங்கப்படுவது ‘முறையற்ற கையகப்படுத்துதல்’ அல்லது ‘ஹோஸ்டைல் டேக்ஓவர்’ என்று அழைக்கப்படுகிறது. 2009-10ல் ராதிகா மற்றும் பிரணாய் ராய் ஆகியோருடன் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில், VCPL தனது உரிமைகளைப் பயன்படுத்தியதாக என்டிடிவி செய்தி சேனல் தெரிவித்துள்ளது. 19,90,000 வாரன்ட்டுகளை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளாக பங்கு ஒன்றுக்கு ரூபாய் 10 என்ற அளவில் மாற்ற விசிபிஎல் தனது விருப்பத்தைப் பயன்படுத்தியதாகவும், இதற்காக மொத்தம் 1.99 கோடி ரூபாய் ஆர்ஆர்பிஆர்ஹெச் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

ஆனாலும் NDTV அதன் செயல்பாடுகளில், பத்திரிகை தர்மத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள வில்லை. நாங்கள் தொடர்ந்து அந்த பத்திரிகையில் பெருமையுடன் நிற்கிறோம் என்று என்டிடிவி சேனல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்