September 20, 2021

ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

நார்த் இண்டியாவில்  உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலமான போகிபீல் பாலத்தை இன்று டிசம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசாம் மாநிலம் திப்ரூகார் முதல் அருணாச்சல பிரேதசத்தின் பசிகாட் வரை போகிபீல் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இதைக் கட்டும் பணி கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று டிசம்பர் 25 ஆம் தேதி இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேல் சுமார் 4.94 கி.மீ செல்கின்றது. பாலத்தின் கீழ்த்தளத்தில் இருவழி ரயில் பாதையும் மேல்தளத்தில் 3 வழிச்சாலையும் அமைந்துள்ளது. இந்தப் பாலத்திற்கு 1997ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமரான தேவகவுடா அடிக்கல் நாட்டினார். கடந்த 2002ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 16 ஆண்டுகளாக நடந்துவந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஒரு வழியாக 5,900 ரூபாய் கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

பாலத்தை திறந்து வைத்த பின் சாலைப் பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற பிரதமர் மோடி இரு புறமும் கூடி இருந்தவர்களைப் பார்த்து கையை அசைத்தார். இன்று முதல் ரயில் பாலத்திலும் சாலைப் பாலத்திலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலம் ஆகும்.

ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும்.

இந்தப் பாலத்தின் மூலம் அசாமில் உள்ள டின்சுகுகியாவுக்கும், அருணாசலப் பிரதேசத்தின் நாகர் லகுன் ஆகிய பகுதிக்கும் இடையே பயணம் 10 மணி நேரம் குறையும். வடகிழக்கு எல்லை யில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்குப் பயனுள்ளதாக அமையும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இது வரை ரயில்வேயின் மிக நீளமான பாலமாக கேரளாவின் வேம்பனாத் ரயில்வே மேம்பாலம் விளங்கியது. இதன் நீளம் 4.62 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

டெயில் பீஸ்:

இந்நிலையில் இந்த  பாலத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா விற்கு  அழைப்பு விடுக்கப்படாததற்கு  தனது  அதிருப்தியை  தெரிவித்து உள்ளார்.இது  குறித்து செய்தியாளர் கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர்  தேவே கவுடா,  “ நான் பிரதமராக இருந்த காலத்தில், காஷ்மீரில்  ரயில் பாதை, டெல்லியில்  மெட்ரோ, போகிபீல் ரயில் சாலை பாலம் ஆகிய  திட்டங்களுக்கு அப்போது  தலா ரூ.100 கோடி விடுவித்து ஒப்புதல் கொடுத்து , அடிக்கல்லும் நட்டினேன்.ஆனால் தற்போது  மக்கள் என்னை மறந்து விட்டனர்”. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அய்யோ ராமா! என்னை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்?என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை தெரிவித்த்துள்ளார்.