பாக்.கில் மத நிந்தனை வழக்கில் சிக்கிய ஆசிய பீவிக்கு உதவ உலக நாடுகள் தயார்!
உலக அளவில் தீவிரவாதிகள் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் சிக்கி விடுவிக்கப்பட்ட கிறிஸ்துவ பெண் ஆசியா பீபி மற்றும் அவரது குடும்பத்தினரை பாகிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற இத்தாலி அரசு உதவி செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகாரில் இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவதூறாக பேசியதாக பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்துவ பெண் ஆசியா பீபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஆசியா பீபி தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணை முடிவில் பாகிஸ்தான் மத நிந்தனை சட்டத்தின் கீழ் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் லாகூர் உயர்நீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானின் பழமைவாத அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. அதன் காரணமாக பாகிஸ்தானில் பதற்றம் நிலவியது.
ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவரது உயிருக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து உள்ளதால் அவர் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளார். பாகிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தி னரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தங்கள் குடும்பத்திற்கு அடைகலம் தரும்படி பல உலக நாடுகளுக்கு ஆசியா பீபியின் கணவர் கோரியுள்ளார்.
ஆனால் ஆசியா பீபிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை முடியும் வரை அவர் நாட்டை விட்டு செல்ல இம்ரான் கான் அரசு தடை விதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆசியா பீபி மற்றும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தானை விட்டு வெளியேற சில உலக நாடுகளுடன் இணைந்து உதவி செய்ய தயாராக உள்ளதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் இத்தாலி உள்துறை அமைச்சர் மாட்டியோ சால்வானி கூட ஆசியா பீபிக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார். பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் ஆசியா பீபிக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.