அருந்ததி பட்டாச்சார்யா ரிலையன்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக சேர்ந்ததன் மர்மம் ?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநராக எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 17 முதல் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் நீடிப்பார். இதற்கான ஒப்புதல் அனைத்துப் பங்குதாரர்களிடமும் பெறப்பட்டுள்ளது. சுயாதீன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அருந்ததி பட்டாச்சார்யா நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகச் செயல்படுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்தவரான அருந்ததி பட்டாச்சார்யாவுக்குத் தற்போது 62 வயதாகிறது. இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும், லேடி பிரபவுர்ன் கல்லூரியிலும் படித்தவர். இவருக்கு நிதித் துறையில் 40 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் பெண் தலைவரும் இவர்தான். பங்கு முதலீட்டு நிறுவனமான கிறிஸ்கேபிடல் கடந்த வாரத்தில் இவரை ஆலோசகராக நியமித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இச்செய்தி குறித்து வாட்ஸ் அப்-பில், “இவர் தான் சென்ற ஆண்டில் ₹1300 கோடி ரூபாய்களை எடுத்து “ரிலையன்ஸ் குழு”-மத்திற்கு கடனாக வழங்கியவர்.தன்னுடைய பதவிக் காலம் முடிந்த நிலையில், இன்று முதல் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.தன்னுடைய பதவிக் காலத்தில் மக்களின் சேமிப்புகளை எல்லாம் தனி யாருக்கு வாராக் கடனாக வாரிக் கொடுத்து விட்டு, இன்றைக்கு அதே கம்பெனியில் பதவி சுகத்தை அனுபவிக்கத் தயாராகி விட்டார்.இது போன்ற ” தில்லாங்கடி ” வேலைகளை எல்லாம் நம் கவனத்தில் படாமல் மறைக்கத்தான் இந்த “#Mee_too” ஒப்பாரிகள் எல்லாம்.” என்ற கமெண்ட் ட்ரெண்டாகி வருகிறது.