September 21, 2021

அருணாசல் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பாரா நபம் துகி?

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு 10 நாள்கள் கால அவகாசம் வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நபம் துகி விடுத்த கோரிக்கையை ஆளுநர் ததாகத ராய் நிராகரித்து விட்டார்.இதையடுத்து, பேரவையில் நபம் துகி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை (ஜூலை 16) திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது. அதே சமயம் அவர் வெற்றி பெறும் சாத்தியம் குறைவுதான் என்றும் தகவல் வெளியாகியுள்ளத்ஜு.

ap jy 16

இதுதொடர்பான வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கலிகோ புல் தலைமையிலான அருணாசலப் பிரதேச அரசு சட்ட விரோதமானது என்று அறிவித்தது. மேலும், நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசை மீண்டும் ஏற்படுத்தியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, அந்த மாநில முதல்வரான நபம் துகியிடம் சனிக்கிழமையன்று (ஜூலை 16) சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ததாகத ராய் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இடாநகரில் ததாகத ராயை முதல்வர் நபம் துகி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது, பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தனக்கு குறைந்தபட்சம் 10 நாள்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்று நபம் துகி கோரிக்கை விடுத்தார். இந்தத் தகவலை ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.

எனினும், 10 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நபம் துகி விடுத்த கோரிக்கையை ஆளுநர் ததாகத ராய் நிராகரித்து விட்டார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சட்டப் பேரவையில் நபம் துகியை சனிக்கிழமை (ஜூலை 16) தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையை குறுகிய காலத்தில் கூட்டுவது சாத்தியமில்லாதது என்று பேரவைத் தலைவர் நபம் ரெபியா கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “சட்டப் பேரவையைக் கூட்டுவதற்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன; சட்டப் பேரவை விவகாரத்துறையிடம் இருந்து இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட வேண்டும்; அதைத் தொடர்ந்து நாங்கள் பேரவையைக் கூட்டுவது தொடர்பான அழைப்பாணையை வெளியிடுவோம். எனவே, குறுகிய கால இடைவெளியில் பேரவையைக் கூட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்’ என்றார்.

ஆனாலும், அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கலிகோ புல் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் குவாஹாட்டிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார்.

முன்னதாக முதல்வர் நபம் துகிக்கு எதிராக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலிகோ புல் தலைமையில் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து, நபம் துகி அரசு கடந்த ஜனவரி மாதம் கவிழ்ந்தது. இந்நிலையில், கலிகோ புல் ஆட்சியமைக்க பாஜகவின் 11 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சைகளும் ஆதரவு அளித்தனர். இதையடுத்து, கலிகோ புல் தலைமையில் புதிய அரசமைந்தது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் கடந்த புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில், தனக்கு 43 பேரின் ஆதரவு இருப்பதாக கலிகோ புல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு திட்டமிட்டபடி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டால், நபம் துகி அரசு வெற்றி பெறுமா என்பதில் சந்தேகமே நிலவுகிறது.